Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 13, 2019

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்... விசிட்டிங் கார்டுகள்... அசத்தும் பட்டதாரி இளைஞர்!


மரங்கள், நமக்கு எவ்வளவோ நன்மைகளை வாரி வழங்குகின்றன. குறிப்பாக, தொன்மை மரமான பனை, நமக்கு நுங்கு, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு என ஏராளமாகத் தருகிறது. இருப்பினும், அந்தப் பனை இனத்தையே அழித்துவருகிறது நமது சுயநலம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர் ஊட்டிய விழிப்புஉணர்வில் ஏராளமான இளைஞர்கள் இப்போது பனையைக் காக்கப் புறப்பட்டிருப்பது ஆறுதல். சாமிநாதனும் அந்த வகைதான். நெகிழிக்கு மாற்றாக பனை ஓலையில் பெட்டிகள், கொட்டான்கள், சோப்பு கவர்கள், பூச்செடிகள் வளர்க்கும் பெட்டிகள் போன்றவை தயாரிக்கிறார். பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள், விசிட்டிங் கார்டுகள், திருமணத்துக்கான மாலைகள் என இவர் தயாரிக்கும் பொருள்கள், பழைமை மாறாத புதுமையாக மிளிர்கின்றன.




நம்மாழ்வார் நிரந்தரத் துயில்கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் வானகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில், பனை ஓலைகளைக் கொண்டு செய்த பொருள்களைக் காட்சிப்படுத்தினார் சாமிநாதன். அதைப் பார்த்து அசந்துபோய், அவரிடம் பேசினோம்.

`எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஆமந்தகடவு கிராமம். இப்போ மதுரை மாவட்டம் ம.கல்லுப்பட்டியில் வசிக்கிறேன். எங்க குடும்பத்தோட குலத்தொழில் விவசாயம்தான். ஆனா, படிக்கிற காலத்துல எனக்கு விவசாயம்மேல பெரிய பிடிப்பில்லை. அதனால, எம்.பி.ஏ படிச்சுட்டு, 2012-ல சிட்டி யூனியன் வங்கிப் பணியில சேர்ந்தேன். 30,000 ரூபாய் சம்பளம்.



இருந்தாலும், சீக்கிரம் அந்த வேலை அலுத்துவிட்டது. இதற்கிடையில, நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைச்சது. அதைப் பார்த்ததும் விவசாயம் மேல ஆர்வம் வந்துச்சு. 2015 வரைக்கும் வங்கிப் பணியில இருந்தேன். அதுக்கப்புறம் அந்தப் பணியைத் விட்டுட்டு, ம.கல்லுபட்டியைச் சேர்ந்த, ஐ.டி துறையில வேலைபார்க்கும் இளவேனிலோடு சேர்ந்து அவருக்குச் சொந்தமான நாலு ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். வானகத்துக்கும் அடிக்கடி வந்து, இன்னும் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தற்சார்பான வாழ்க்கையைப் பற்றியத் தேடல்ல ம.செந்தமிழன் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, `மரபு சார்ந்த தொழில்களை மீட்டெடுக்கணும்'னு குறிக்கோளை வளர்த்துக்கிட்டேன்.




அதுக்குப் பிறகு, பனை சார்ந்த தொழில்களை முன்னெடுக்கத் திட்டமிட்டு, கடந்த ஒரு வருஷமா தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் போய், ஓலைப் பின்னல்களைக் கத்துக்கிட்டேன். தூத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர்தான், இப்படி நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தார்.

நான், இளவேனில், இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து, `பனையேற்றம்'னு ஒரு அமைப்பைத் தொடங்கினோம். நான் இப்போ வசிக்கும் ம.கல்லுப்பட்டியைச்

மாலை
சுற்றியுள்ள கிராமங்கள்ல உள்ள பெண்களுக்கு இந்தப் பனை ஓலையில பொருள்களை எப்படிச் செய்றதுன்னு பயிற்சியளித்து, அவங்களை வெச்சே பொருள்கள் தயாரித்து விற்பனை செய்றோம். `பனையோலைப் பொருள்களை பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரணும்' என்ற நோக்குல இன்றைய தேவைகளை அறிந்து, பல பொருள்கள் தயாரிக்கிறோம்.
கடந்த வருடம் பனையோலையில் மரக்கன்றுகள் வளர்க்கக்கூடிய நாற்றுத்தொட்டிகள் செய்து, வானகத்தில் ஐயாவின் பிறந்த நாள் நிகழ்வுல மூலிகைச் செடிக் கண்காட்சியில வெச்சோம். இந்த வருடம்கூட வெச்சோம்.



தற்சமயம் `செம்மை வனம்' சார்பாக சென்னை மற்றும் பெங்களூருல நடக்கும் `மரபுக்கூடல்' நிகழ்வுலயும், இயல்வாகை சார்பா கோவை மற்றும் திருப்பூர்ல நடக்கும் `நம்ம ஊர் சந்தை' நிகழ்வுலயும் பனை ஓலைப் பொருள்கள் `பனையேறிகள்' குழுவின் சார்பா விற்பனை செய்யப்படுது. மேலும், பல நிகழ்வுகள்லயும் அங்காடி அமைச்சு விற்பனை செய்றோம். பனை ஓலை மூலம் ஒரு சோப் கம்பெனிக்கு சோப் கவர்கள் செய்து தர்றோம்.

திருமணம், வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் பனை ஓலையிலேயே அழைப்பிதழ்கள் அச்சிட்டுத் தர்றோம். அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இதேமாதிரி விசிட்டிங் கார்டுகளும் அச்சிட்டுத் தர்றோம். திருக்குறள் தொடங்கி தொன்மையான தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நமக்கு வழங்கியவை இந்தப் பனை ஓலைகள்தான். அதனால், அதே பனை ஓலையில் அழைப்பிதழ்களை அச்சடிப்பது நமது பாரம்பர்யத்துக்குப் புகழ் சேர்க்கும்.

திருமணம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் மாலை, தோரணம், பூச்செண்டு, மலர்க்கொத்து, மேடை அலங்காரம் செய்றோம். இதெல்லாம் தவிர, பரிசுப்பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், தானியங்கள், உணவுப் பண்டங்கள் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் கொட்டான்கள், பெட்டிகள், கூடைகள், தட்டுகள், தாம்பூலங்களும் செஞ்சு விற்பனை செய்றோம்.



கண்காட்சி
நெகிழிப் பயன்பாட்டுக்கு மாற்றா, அடைப்பான் பெட்டிகள் (Packing Boxes) வேண்டிய அளவிலும் வடிவிலும் (சதுரம், வட்டம், செவ்வகம்) செய்து கொடுக்கிறோம். அதேபோல், சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் தங்கள் வீட்டுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களை உற்பத்தி செய்ய பயிற்சி தர்றோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்படிப் பனை ஓலைப் பின்னல்கள் மூலம் பொருள்கள் செய்யும் இலவசப் பயிற்சி கொடுக்கிறோம்.



ஓலைப் பெட்டி
அடுத்து பனை நார் சார்ந்த தொழில்களை முன்னெடுக்கவும், பனை சார்ந்த உணவுகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும் திட்டம் இருக்கு. மூணு மாசத்துக்கு முன்புதான் எனக்கு திருமணம் முடிஞ்சுது. தனியார் கல்லூரிப் பேராசிரியையாக இருந்த என் மனைவி கோகிலாமணி, அந்த வேலையை விட்டுட்டு என்கூட இந்தப் பொருள்களைச் செய்றார். பனை சார்ந்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்விதமா, நம்ம முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த பனைப்பொருள்களைத் தேடிக் கண்டறிந்து, அதெயெல்லாம் திரும்பவும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே `பனையேற்றம்' அமைப்பின் நோக்கம். நிச்சயம் அந்த இலக்கை எட்டிப்பிடிப்போம்!" என்றார் உறுதியாக!

Popular Feed

Recent Story

Featured News