Monday, February 18, 2019

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரமாக்கி வாழ்வாதாரம் காத்திடவேண்டும் என கோரிக்கை!


45 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது...!
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்யலாம்....*



தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் சிறப்பு பயிற்றுநர்கள் 1998 முதல் தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்...


1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) பணிபுரிந்து வந்தனர்..2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு (NGO) நிருவனங்களின் மூலமாக பணிபுரிந்து வந்தனர்.

NGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜீன் மாதம் தொண்டு நிறுவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் பணியமர்த்தியது..ஆனால் எவ்வித பணிஆணையும் வழங்கப்படவில்லை..



MHRD வழிக்காட்டுதல் படி 2015 ஆண்டு ஜீன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்..ஆனால் எவ்வித பணி மாறுதல் ஆணையும் வழங்கப்படவில்லை..

பணிஆணை வழங்கப்படாத காரணத்தால் அடிப்படை பணிச்சலுகைகள் மறுக்கப் படுகிறது. தொடர்ச்சியாக தற்செயல் விடுப்பு இல்லை. மத விடுப்பு இல்லை. தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் இல்லை.. ஊதிய உயர்வு இல்லை.. இ.பி.எப் பிடித்தம் இல்லை.. மருத்துவ காப்பீடு இல்லை.. பணிவரண்முறை கிடையாது..

பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் ஆகிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.



மேலும் முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்..

சமீபத்தில் டி.பி.ஐ வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் தலைவர் தீபக் , அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன் , சீமான் , ஜி.கே.வாசன் ,ஏ.கே.மூர்த்தி, பழ.நெடுமாறன், முத்தரசன், பால கிருஷ்ணன் , மல்லை சத்யா, எல்.கே.சுதீஷ் , வெற்றிவேல் , ஆகியோர் நேரில் சந்தித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...



மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய சிறப்பான பணி காரணமாக பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஆதரவு குரல் கொடுத்தனர்..

பிற மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் டெல்லியில் 41750 , ஆந்திராவில் 21000 , மகாராஸ்டிராவில் 30759 , கர்நாடகாவில் 20000 , புதுச்சேரியில் 20000 , கேரளாவில் 27000 , ஹாரியானாவில் 42409 , ஆனால் தமிழ்நாட்டில் 14000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்குரியது..

நாடு முழுவதும் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒருங்கிணைந்த கல்வி என்ற பெயரில் ஒரே மாதிரியான செயல்பாடுகள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதென்பது பாரபட்சமான நடவடிக்கை சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது.



ஆந்திரா கேரளா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை தமிழகஅரசு பணிநிரந்தரம் செய்ய 79 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது..

இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது..

எனவே 1761 பட்டதாரி / இடைநிலை சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய 45 கோடி நிதியினை மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.

பல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை நிதிஒதுக்கீடு செய்யும் தமிழக அரசு கடந்த 21 ஆண்டுகளாக (1998 to 2019) லட்சக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கருணையோடு, தொண்டுள்ளத்தோடு சொற்ப ஊதியத்தில் எவ்வித அடிப்படை பணிச்சலுகையின்றி பணித்தளத்தில் உரிய அங்கீகாரம் கூட இல்லாமல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.



தமிழக அரசு 21 ஆண்டு பணிக்காலத்தை கனிவோடும் கருணையோடும் பரிசீலித்து சிறப்பு பயிற்றுநர்களுக்கு 45கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து பணிநிரந்தரமாக்கி வாழ்வாதாரம் காத்திட வேண்டும என்று தமிழ் நாடு - ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அருண் - 989407063

Popular Feed

Recent Story

Featured News