திருக்குறள் : 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
உரை:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
பழமொழி:
Hunger is the best source
பசி ருசி அறியாது
பொன்மொழி:
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
-மாத்யூஸ்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1) உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9 பிரிவுகள்
2) சூரியனின் வயது ?
500 கோடி ஆண்டுகள்
நீதிக்கதை :
பேராசை பெரும் நஷ்டம்
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.
வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.
ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.
உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.
தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.
தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.
ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
இன்றைய செய்தி துளிகள் :
1) ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2) பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை!
3) ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த 6ம் வகுப்புதமிழ் பாடப்புத்தகத்தில் தவறான வருட குறிப்பு பதிவாகி இருப்பதை நீக்குமாறு வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
4) பிளாஸ்டிக் தடை..... மீறினால் 1 லட்சம் வரை அபராதம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
5) ஆஸ்திரேலியாவுடன் டி20, ஒருநாள் தொடர் இந்திய அணி பிப். 15ல் தேர்வு