Wednesday, March 6, 2019

100 அரசு பள்ளிகளில் விளையாட்டு அரங்கம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 100 அரசுப் பள்ளிகளில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


2018-19ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் வழங்குதல், சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களை சர்வதேச மெடல் பெறும் திட்டத்தில் சேர்ப்பதற்கான திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 567 விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் வழங்கினார்.



பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வசதியாக 1000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி மற்றும் அனைத்து உதவிகளும் வழங்க 30 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு தேவைக்கேற்ப பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.


பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அனைத்து வகையிலும் திறனுடன் படித்து உயர்வதற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டம் உருவாக்–்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 100 அரசுப் பள்ளிகளில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.



இவை அனைத்தும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அமைக்கப்படும். அதற்காக தமிழகத்தில் 100 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் 1000 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Popular Feed

Recent Story

Featured News