Monday, March 4, 2019

15 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்:டிரான்ஸ்பரை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரியர்களில் 15 பேரை மட்டும் திடீரென பணியிட மாற்றம் செய்துள்ளதை, கல்லூரிக் கல்வி இயக்ககம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கல்லூரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.



ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஜனவரி 23ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டதில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலர் பணிக்கு திரும்பினர்.


குறிப்பிட்ட சில ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் பின்னர் பணியில் சேர்க்கப்பட்டனர். பணியில் சேர்ந்த பிறகு சஸ்பெண்ட் உத்தரவுகளை அரசு ரத்து செய்தது. ஆனால், 17பி என்னும் ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், பணியில் சேர்ந்து 12 நாட்கள் கடந்த நிலையில், கல்லூரி ஆசிரியர்கள் 27 பேரை, கல்லூரிக் கல்வி இயக்ககம் திடீரென சஸ்பெண்டு செய்தது. பின்னர் 9 நாட்களுக்கு பிறகு, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துவிட்டு, அவர்களில் 15 ஆசிரியர்களை மட்டும் பணியிட மாற்றம் செய்தது. இந்த நடவடிக்கைக்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்தது.


இந்த செயல் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்து, கல்லூரிக் கல்வி இயக்ககத்தை கண்டித்து சென்னையில் உண்ணா விரதம் இருப்பது என்றும் அறிவித்தனர். இதன்படி, சென்னையில் காயிதே மில்லத் மணி மண்டபம் எதிரில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணா விரதம் மேற்கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News