Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 28, 2019

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க முடியாது..!


ஏற்கனவே அரசுப் பணியாற்றி வரும் நபர்கள் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, தங்களை நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கக் வேண்டும் என தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 தேர்வு நடைபெற்றது. மொத்தம், 85 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடைபெற்ற இந்தத் தேர்வில், 14 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.
இவ்வாறு எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனையடுத்து தங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும் என மேற்குறிப்பிட்ட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.



இந்த வழக்கானது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 14 ஆயிரத்து 473 பேரில் 1,073 பேர் அரசுப் பணிகளில் இருப்பவர்கள். இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர்கள் 5 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களில் அரசுப் பணியில் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மனுதாரர்கள் அதை குறிப்பிடவில்லை என வாதிட்டார்.



இதுகுறித்து விசாரித்த நீதிபதி, டிஎன்பிஎஸ்சி விதிகளின்படி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தாங்கள் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுவதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரர்கள் இதனை பின்பற்றாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.