Thursday, March 7, 2019

ரூ.2000 வழங்கும் அரசின் திட்டத்துக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்


வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.



வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்குவதற்கு குடும்பங்களைக் கண்டறிவதில் தவறு நடந்திருப்பதாகவும், தேர்தல் நோக்கத்துக்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்படிருந்தது.

நிதியுதவி திட்டம் தொடர்பான அரசாணையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், பத்திரிகை செய்திக்குறிப்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.




போலியான அரசாணையை மனுதாரர் தாக்கல் செய்திருப்பதாகவும், மனுதாரருக்கு எங்கிருந்து இந்த நகல் கிடைத்தது என ஆய்வு செய்து வரு வதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தாங்கள் தாக்கல் செய்த அரசாணை அசல்தான் என்றும், 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை, தமிழக அரசு மீண்டும் மாற்றியிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.





இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் 60 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்த உயர்நீதிமன்றம் வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Popular Feed

Recent Story

Featured News