Saturday, March 30, 2019

மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?


2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.



தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, தேர்தல் ஆணையம் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 65 வேட்பாளர்கள் பெண்கள். ஒருவர் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்.

மொத்தமுள்ள 845 வேட்பாளர்களில் 559 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.



கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை போட்டியிடுகிறார்.

நீலகிரி தனித் தொகுதியில்தான் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 வேட்பாளர்கள் மட்டுமே இங்கு களத்தில் உள்ளனர்.



இங்கு தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஆ. ராசாவும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் எம். தியாகராஜனும் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில் மொத்தம் 274 பேர் போட்டியிடுகின்றனர். பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 40 பேரும் குடியாத்தம் தொகுதியில் குறைந்தபட்சமாக 7 பேரும் போட்டியிடுகின்றனர்.

Popular Feed

Recent Story

Featured News