Thursday, March 21, 2019

தமிழக அரசின் நீட் இலவசப் பயிற்சி: மார்ச் 25 முதல் மீண்டும் தொடக்கம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மையங்கள், வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) முதல் மீண்டும் செயல்படவுள்ளன.


நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறும் நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 412 மையங்களில் இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டுக்கான பயிற்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதில் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர்.
இதையடுத்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியதால், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நீட் பயிற்சியை கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி நிறைவு செய்து பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. மேலும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும் 22-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.


இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 25-ஆம் தேதியில் இருந்து மீண்டும் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்காக பதிவு செய்துள்ள 20 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சியின் முடிவில் அது குறித்த தேர்வுகள் நடத்தப்படும்.


அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் கூடிய இலவச சிறப்பு நீட் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் 20 நாள்கள் நடைபெறும்.

Popular Feed

Recent Story

Featured News