Wednesday, March 6, 2019

`நாங்கள் எதிர்பார்க்கல, இந்தப் பெருமைக்குக் காரணம் அகல்யாதான்!'- நகராட்சிப் பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சி


மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது சிறந்தது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார் அகல்யா. ஆம்பூர், தனியார் பள்ளி ஒன்றில் 9- ம் வகுப்பு படிக்கும் அகல்யா, இதற்கு முன் தான் படித்த அரசுப் பள்ளிக்கு அருமையான பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதுபற்றி அவர் சொல்வதையே கேட்போம்.



``நான் போன வருஷம் ஆம்பூர், பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்தான் படிச்சேன். இந்தாண்டு வேறு பள்ளிக்குச் சென்றாலும் இந்தப் பள்ளிக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைப்பேன். அப்போதான் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சீராக, பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கித்தருமாறு சிலரிடம் கேட்டதாகத் தெரிய வந்துச்சு.

எனக்குச் சின்ன வயசிலிருந்தே சேமிக்கும் பழக்கம் இருக்கு. எங்க வீட்டுக்கு வரும் சொந்தக்காரங்க கொடுக்கும் பணம், திருவிழாவின்போது அப்பா, அம்மா கொடுக்கும் பணம் எல்லாத்தையும் உண்டியலில் சேமிச்சிட்டு வாரேன். அதை உடைத்து எண்ணியபோது, ரூ.12,000 இருந்துச்சு. அதோடு அப்பா, அம்மாவிடம் கேட்டு, ரூ.50,000 க்கு ஸ்மார்ட் போர்டு வாங்கி எங்க பள்ளிக்குக் கொடுத்தேன்" என்கிறார்.

பள்ளியின் ஆசிரியர் சரவணன் கூறும்போது, `அகல்யா நன்றாகப் படிப்பதோடு, நல்ல விஷயங்களைச் செய்வதில் ஆர்வமாக இருப்பார். கல்வி சீருக்காக ஊரிலுள்ள சிலரிடம் கேட்டபோது, நாங்கள் எதிர்பாராத விதமாக, எங்களின் முன்னாள் மாணவியே ஸ்மார்ட் போர்டு வாங்கிக்கொடுத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களின் மத்தூர் ஒன்றியத்தில் முதன்முதலாக ஸ்மார்ட் போர்டு அமைத்த பள்ளி எனும் பெருமை கிடைத்துள்ளது. அதற்கு காரணம் அகல்யா. அவருக்கு எங்கள் நன்றி. ஸ்மார்ட் போர்டு மூலம் மாணவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.



ஸ்மார்டு போர்டு வழங்கும் நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ சத்திய குமார், ஆசிரியர்கள் அமர்நாத், சரவணன், ஜெயசீலன், சரண்யா, சங்கீதா, ஜெயபாரதி உள்ளிட்டோர் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் தண்டபாணி, தாமரை செல்வி ஆகியோர் பங்கு பெற்றனர்.

Popular Feed

Recent Story

Featured News