Wednesday, March 6, 2019

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டணமில்லாமல் இலவசமாக படிக்க வாய்ப்பு!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பிள்ளைகளை இலவசமாகப் படிக்கவைக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியே வழங்கி வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன.



இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதில் 25 சதவிகித இடங்கள், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (RTE) சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மூன்று பிரிவுகள் உள்ளதால், 30 இடங்கள் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரப்பப்படுகின்றன. முதலாம் வகுப்பில் மட்டும் RTE பின்பற்றப்படுவதால், விண்ணப்பிக்கும்போதே இதைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.


இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவிகித இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவிகித இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவினர் சேர்ந்ததுபோக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும் விண்ணப்பித்துச் சேரலாம்.

முதலாம் வகுப்பில் சேர, மார்ச் 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் www.kvsonlineadmission.in ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது, ஒருவர் மூன்று பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் அளிக்கக் கூடாது. விண்ணப்பத்தில் மொபைல் எண், இமெயில் முகவரி, குழந்தையின் புகைப்படம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தால் வருமானச் சான்றிதழ், பணியிலிருந்து மாற்றலாகியிருந்தால் அதற்கான சான்று போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.


விண்ணப்பித்த பிறகு, குறிப்பிட்ட காலம் வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தில் சரியான தகவல்களை வழங்க வேண்டும். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதால், அதற்கான சான்றிதழையும் வழங்க வேண்டும். இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதை ஆன்லைன் வழியே பார்த்து விண்ணப்பிக்கலாம்.


இதற்கு, ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். பதினொன்றாம் வகுப்பில் சேர, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானவுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறித்து கே.வி பள்ளியில் பேசியபோது, ``மாணவர் சேர்க்கை அனைத்தும் கம்ப்யூட்டர் வழியே வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், கே.வி பள்ளிகளில் குறுக்குவழியில் மாணவர்களைச் சேர்க்க வாய்ப்பு இல்லை. இதனால், பெற்றோர்கள் வெளிநபர்களிடம் பணம் எதுவும் தந்து ஏமாற வேண்டாம்'' என ஆலோசனை வழங்கினார்கள்.

Popular Feed

Recent Story

Featured News