Friday, March 8, 2019

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவசமா படிக்க வேண்டுமா? மத்திய அரசின் அதிரடி..!

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால், இதற்கு லட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டுமே என்ற பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஓர் சிறப்பம்சமும் இப்பள்ளியில் உள்ளது.



ஆமாங்க, பைசா செலவில்லாமல் உங்க குழந்தைய கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கலாம் வாங்க.போட்டிபோடும் பெற்றோர்கள்!

கேந்திரிய வித்யாலயா பள்ளியானது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுவது நாம் அறிந்ததே. இப்பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் மிகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் மாணவர் சேர்க்கைக்குக் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு தான். இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எத்தனைப் பள்ளிகள் ?

நாடு முழுவதும் 1,199 பள்ளிகள் உள்ளன. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகிறது. இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.




இலவச கல்வி உரிமை!

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுவர். இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மூன்று பிரிவுகள் வரையில் உள்ளதால் 30 இடங்கள் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரப்பப்படுகின்றன.




அரசு பணியாளர்களுக்குக் கூடுதல்..!

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவிகித இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவிகித இடங்களில் மத்திய அரசு அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுவர். குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம். அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவினர் சேர்ந்ததுபோக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.




எப்போது விண்ணப்பிக்கலாம் ?

தற்போது வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர, மார்ச் 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.kvsonlineadmission.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய வழியே விண்ணப்பிக்கும்போது, ஒருவர் மூன்று பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் அளிக்கக் கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தால் வருமானச் சான்றிதழ், பணியிலிருந்து மாற்றலாகியிருந்தால் அதற்கான சான்று உள்ளிட்டவற்றையும் இணைத்தல் அவசியம்.




வாய்ப்புகளும் உண்டு..!

ஒரு முறை விண்ணப்பித்த பிறகு, குறிப்பிட்ட காலம் வரையில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்படும். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது என்பதால், அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும்.




முழு விபரமும் உங்கள் கையில்..!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதை இணையதள வழியே பார்த்து நீங்களே பார்த்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான பிறகு 11ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டும்.


Popular Feed

Recent Story

Featured News