Tuesday, March 12, 2019

அரசு ஊழியர்கள் வீட்டுக் கடன் பெற கட்டுப்பாட்டில் தளர்வு: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வட்டியில்லாத கடன்களைப் பெறுவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்ட உத்தரவு:



தமிழக அரசுத் துறைகளில் அரசு ஊழியர்கள் நான்கு வகையான பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

ஏ, பி, சி மற்றும் டி பிரிவு என்ற வகைகளில் பணியாற்றி வரும் அவர்கள் அரசு ஊழியர்கள் என்பதால், உறவினர்களிடம் இருந்தும், சிறப்பு நிகழ்வுகளான திருமணங்கள், திருமண நாள்கள், பிறந்த நாள்கள், மத சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றின் போதும் பரிசாகப் பெறக் கூடியவற்றின் மொத்த மதிப்பு ரூ. 25 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது.



மேலும், இவ்வாறு பெறப்பட்ட பரிசுகள் குறித்த விவரத்தை அரசுக்கு ஒரு மாதத்துக்குள் தகவலாகத் தெரிவிக்க வேண்டும்.

மொத்தத்தில் பரிசாகப் பெறக் கூடிய தொகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் அல்லது ஆறு மாத மொத்த ஊதியம் அவற்றில் எது குறைவோ அந்தத் தொகையாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில், வீடு கட்டுவது போன்ற பணிகளுக்காக கடனாக நண்பர்களிடம் பணத்தைப் பெறும் போது சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



அதன்படி, அரசு ஊழியர்கள் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து தனிப்பட்ட முறையிலான வட்டியில்லாத கடனாக ரூ.5 லட்சம் வரை வாங்கிக் கொள்ளலாம்.

இந்தத் தொகையை முற்றிலுமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவோ அல்லது ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டினை வாங்கவோ அல்லது காலி மனையில் வீடு கட்டிக் கொள்ளவோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் அரசுச் செயலாளர் ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News