Friday, March 15, 2019

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் விதிமுறைகள்..!



இந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பாகும். தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும்.



இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும், மேற்பார்வையிடவும்இ நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of Peoples Act 1950) ஆகும்.

இந்திய தேர்தல் ஆணையர் :

சுனில் அரோரா புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சுனில் அரோரா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 38 ஆண்டுகால பணிக்காலத்தில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.



சுனில் அரோரா திட்டக்குழு, நிதியமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்டவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் பணியாற்றியபோது பல சீர்த்திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலம், ஏர் இந்தியாவினை லாபத்தில் இயங்க வைத்தது, இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

சுனில் அரோரா பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவுகளை உடனுக்குடன் எடுப்பவர் என்று பெயர் பெற்றவர். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலும், சுமார் 10 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும், சுனில் அரோரா முன் உள்ள சவால்களாக இருக்கிறது.



தேர்தல் விதிமுறைகள் :

நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், தேர்தல் முடியும் வரை ஆட்சியில் உள்ள அரசுகள் புதிய நலத்திட்டங்களை அறிவிக்கக்கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு தடையில்லை.

அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக்கூடாது.



பதவி உயர்வு அளிக்கக்கூடாது என்பது விதி. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.

அரசு விழாக்கள் நடத்தக்கூடாது. அமைச்சர்கள் என்ற முறையில் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக்கூடாது.

பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றை பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக்கூடாது.

வாக்குச் சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.



வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.



மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் செய்யக்கூடாது.

மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக்கூடாது.

அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக்கூடாது.

தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.



வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது

Popular Feed

Recent Story

Featured News