Monday, March 11, 2019

தனியார் பள்ளிகளின் கட்டட வரைபடம் தொடர்பான அரசாணை: தடை நீட்டிப்பு

தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற நகர ஊரமைப்புத் துறையிடம் கட்டட வரைபட அனுமதி பெற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற நகர் ஊரமைப்புத் துறையிடம் கட்டட வரைபட அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த உத்தரவு எங்களது சங்கத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்குப் பொருந்தாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயமாக வரைபட அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு தரப்பு உரிய எதிர்மனுதாரர்களைச் சேர்க்கவில்லை. எனவே வழக்கு விசாரணையை வரும் மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Popular Feed

Recent Story

Featured News