Saturday, March 30, 2019

மருத்துவ மேற்படிப்பு: நாளை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது.


அதன்படி, 11,650 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி 1250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்தன. இந்த நிலையில், மாநிலத்துக்கு கூடுதலாக 124 இடங்களை வழங்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது.


இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.


இதைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்துள்ளது. அதில், 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும் 235 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News