Friday, March 29, 2019

போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முத்து. இவர், எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல் 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவர் பணியில் இருந்து விலகியதாக அறிவித்து 60 நாட்களுக்குள் ஆயுதப்படை டி.ஐ.ஜி. முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு காவல் படை கமாண்டன்ட் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து முத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குறிப்பிட்ட நாட்களுக்குள் டி.ஐ.ஜி. முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்காத மனுதாரர் முத்து, சென்னைக்கு வந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இது ஒழுங்கீனத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

பின்னர், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒழுங்கீனம் அதிகரிப்பு மேலும் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சமீபகாலமாக காவல்துறையில் ஒழுங்கீனம் அதிகரித்து வருகிறது. காவலர்கள் பணிநேரத்தில் ஸ்மார்ட் போன்களில் விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். பணிக்கு தேவையான கல்வி தகுதிக்கு அதிகமாக படித்தவர்களை நியமிப்பதால் தான் ஒழுங்கீனம் அதிகரித்து வருகிறது. ஐகோர்ட்டில் துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு முதுகலை படிப்பை முடித்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பணியை அக்கறையின்றி செய்து வருகின்றனர்.

அதிகபட்ச கல்வித்தகுதி என்ன? போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதி என்ன? என்பதை நிர்ணயித்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 8 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதன்மூலம், எஸ்.எஸ்.எல்.சி. கல்வித்தகுதிக்கான பணிகளுக்கு தொழிற்கல்வி படித்தவர்கள் போட்டியிடுவதை தவிர்க்க முடியும். கடைநிலை பணிக்கு முதுகலை படித்தவர்களையும், தொழிற்கல்வி படித்தவர்களையும் அனுமதிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News