Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 28, 2019

தொலைதூர கல்வியில் வேளாண் பட்டப்படிப்பு ரத்து

தொலைதூர கல்வியின் மூலம் வேளாண் பட்டப்படிப்பு தடை செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
இந்த முடிவு உயர்கல்வித்துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தால் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. வேளாண் பட்டப்படிப்பு கல்வி என்பது இயற்கை தொழில்நுட்பமும், பரிசோதனை முயற்சிகளும், ஆய்வகச் சோதனைகளும் கூடிய கல்வி என்பதால் அதை தொலைதூர கல்வி முறையில் பாடமாக போதிக்க இயலாது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.


இதுகுறித்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம், உயர்கல்வி ஆணையத்துக்கு செய்துள்ள பரிந்துரையை ஏற்று தொலைதூர பல்கலைக்கழகங்களிலும், திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலும் வேளாண் பட்டப்படிப்பை கற்றுக் கொடுக்க தடை விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. திறந்தவெளி மற்றும் தொலைதூர பல்கலைக்கழகங்களில், பல்கலைக்கழக மானியக்குழுவின் ஒழுங்குமுறை ஆணையம்-2017ன்படி, தொழிற்பயிற்சி சார்ந்த கல்வியான மருத்துவம், பொறியியல், கட்டடவியல், மருத்துவ செவிலியர், பல் மருத்துவம், மருந்து கையாளுதல் மற்றும் பிஸியோதெரபி போன்ற கல்விகளை கற்றுத்தர முடியாது.


ஏற்கனவே, கல்லூரிகளில் வேளாண் பட்டப்படிப்பை பயின்று வரும் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) சார்பில், தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் வரும் 2019ஆம் ஆண்டு முதல் புதிய சேர்க்கையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.