Monday, March 11, 2019

பணப்பரிமாற்றமா? அப்போது அவசியம் ஆவணத்தை மறவாதீர்கள்?!

மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைய பறக்கும் படையின் பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.



இந்தியாவிலேயே, பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி, வாக்குகளைப் பெற முயற்சிக்கும் கலாச்சாரம் அதிகமுள்ள மாநிலம் தமிழகம். எனவே, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்ரல் 18ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபடுவர். அப்போது ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவை பற்றிய செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்தி வெளியிடப்படும்.



இந்தச் சோதனையின் போது வியாபாரம், திருமணம் போன்ற சொந்த விசேஷங்களில் பணம் கொண்டு செல்பவர்களும் சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையின் பரிசோதனைக்கு ஆளாவர். எனவே, இதுபோன்ற அசவுகரியங்களைத் தவிர்க்க, ரொக்கம் மற்றும் பொருட்களுடன் பயணிப்போர், அவற்றுக்கான உரிய ரசீது, ஆவணங்களை வைத்திருப்பதன் மூலம் பறிமுதல் நடவடிக்கைகளிலிருந்து தப்பலாம். ரொக்கமாக கொண்டு செல்வதைத் தவிர்த்து ‌மின்னணு பணப்பரிமாற்றம், காசோலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.




பொருட்களை எடுத்துச் செல்வோர், அதற்குரிய காகித வடிவ ரசீது, மின்னணு பரிமாற்றமாக இருந்தால் அதற்கான ஆதார நகல் ஆகியவற்றுடன் செல்வது சிரமத்தைத் தவிர்க்க உதவும். பெரும்பாலும், பறிமுதல் குறித்த செய்திகள் வந்தாலும், அவற்றில் உரிய ஆதாரங்களை அளித்து திரும்பப் பெறப்படும் ரொக்கம் மற்றும் பொருட்கள் பற்றிய செய்தி வெளியாவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News