Saturday, March 9, 2019

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என முன்னாள் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து வெளியிட்ட வேண்டுகோள்:-

பள்ளிக் கல்வித் துறைக்கு எதிர்வரும் நிதியாண்டில் ரூ.28,757.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அதிகளவில் நிதிகளை ஒதுக்கினாலும், பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த அந்தப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் உதவிட வேண்டும். இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன் என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதயத்தில் உருவாக வேண்டும்.



எனவே, அரசுப் பள்ளிகளில் பயின்று இப்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், இப்போது தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதியை அளிக்க வேண்டும். இதன் மூலம், அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். இதற்கு முன்னாள் மாணவர்கள் உதவிட அழைப்பு விடுக்கிறேன்.



உடனடியாக அனுமதி: அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு எந்தத் தடையும், தாமதமும் இல்லாமல் உடனடியாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



கல்விச் செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட முன்னாள் மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் தாங்கள் கல்வி பயின்ற மற்றும் தங்கள் நிறுவனத்துக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு உதவிட முன்வர வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.

Popular Feed

Recent Story

Featured News