Wednesday, March 13, 2019

திருவிழாவுக்காக தேர்தலை ஒத்திவைக்க இயலுமா?: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவு

மதுரை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் திருவிழா நடைபெறுவதால் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க இயலுமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இரண்டு தினங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.


மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம் உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சியும் மறுநாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெறவுள்ளன.இந்த நிகழ்ச்சிகளில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும்.


மேலும் திருவிழா நடைபெறும் பகுதியில் பல வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகளிலும் பாதிப்பு ஏற்படும். மேலும், திருவிழா பாதுகாப்புக்கு காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவார்கள் என்பதால், தேர்தல் பாதுகாப்புப் பணியிலும் சிரமம் ஏற்படும். எனவே, மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தின் முக்கிய விழாக்களில் ஒன்று மதுரை சித்திரைத் திருவிழா. இந்த விழா ஏப்ரல் 15 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வின்போது தேர்தலை நடத்துவது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பினர்.


அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர், காவல்துறை ஆணையர் தரப்பில் தேர்தலை நடத்துவது சாத்தியம் எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது தமிழகத்தின் முக்கியமான விழா என்பது குறித்து காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஏன் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு இருக்கும் போது 5 லட்சம் பேர் திருவிழாவுக்கு வந்தால் 100 சதவீத வாக்குப்பதிவு எவ்வாறு சாத்தியமாகும்?
மதுரை மட்டுமன்றி திருவண்ணாமலை, தேனியிலும் இதுபோன்ற நிலைமையே உள்ளது.

எனவே தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு தேதியை தள்ளிவைப்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இரண்டு தினங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (மார்ச் 14) ஒத்திவைத்தனர்

Popular Feed

Recent Story

Featured News