குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதுவோர் அதற்கான உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1 பிரிவில் அடங்கியுள்ள துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான 181 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.
இதன்பின், முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 12-இல் தொடங்கி 14-இல் நிறைவடைகிறது. இந்தத் தேர்வுக்காக 9 ஆயிரத்து 850 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மைத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்களை வரும் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.