Saturday, April 27, 2019

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும் 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி முதல் அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிளஸ் 1 வகுப்பு சேர விரும்பும் மாணவ, மாணவிகள் எந்தெந்த பள்ளிகளில் சேர விரும்புகிறார்களோ, அந்த பள்ளிகளில் தனித்தனியே விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, வரும் மே 4ம் தேதி மாலை 4.00 மணிக்குள் இணையதள மதிப்பெண் சான்று நகல், நிரந்தர ஒருங்கிணைந்த சான்று, மாற்று சான்று, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்களை இணைத்து, அந்தந்த பள்ளிகளில் சமர்பிக்க வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் எத்தனை பள்ளிகளில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


அந்த விண்ணப்பங்கள் பள்ளிகளில் பரிசீலனை செய்து, வரும் மே 21ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுநாள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.மே 28 ம் தேதி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிப் பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வும், 30ம் தேதி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் ஜூன் 3ம் தேதி பிளஸ் 1 வகுப்பு துவங்குகிறது.

விண்ணப்ப படிவத்தை பள்ளிக்கல்வி துறையின் இணைய தள (www.schooledn.puducherry.gov.in) முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News