Wednesday, April 10, 2019

கல்லூரி மாணவர்களுக்கு மே 1-இல் மாநில அளவிலான பேச்சுப் போட்டி: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் தகவல்


சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 27-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி வரும் மே 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஏப்.19-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.


இது தொடர்பாக சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலர் ஜெ.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியபுராணம் காப்பியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் ஆராய்ச்சி மையம் கடந்த 26 ஆண்டுகளாக மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் (சம்ஸ்கிருதக் கல்லூரி வளாகம்) வரும் மே 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. மூன்று தலைப்புகளில்...:

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திருநாளைப் போவாராம் மறை முனிவர் (திருநாளைப் போவார் புராணம்), வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என் கொல் (அப்பூதியடிகள் புராணம்), தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை (மங்கையர்க்கரசியார் புராணம்) ஆகிய மூன்று தலைப்புகளிலும் பேச்சைத் தயார் செய்து வர வேண்டும். போட்டி தொடங்கும் 30 நிமிஷங்களுக்கு முன்பு நடுவர்கள் ஏதேனும் ஒரு தலைப்பை மாணவர்களுக்கு வழங்குவர். அந்தத் தலைப்பில் 5 நிமிஷங்கள் பேசுதல் வேண்டும்.


பரிசு விவரம்: போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாவது பரிசாக ரூ.7,500, மூன்றாவது பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இதுதவிர ஆறுதல் பரிசாக மூன்று பேருக்குத் தலா ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.
சென்னையில் நடைபெறும் பேச்சுப் போட்டிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு மட்டும் இரு வழிப் பயணச் செலவு வழங்கப்படும். தங்குமிடம் அவரவர் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


முன்பதிவு செய்ய... போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சேக்கிழார் ஆராய்ச்சி மையம், 22/16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை- 600004 என்ற முகவரியிலும், 044-24997785, 90032 34158 என்ற தொலைபேசி எண்களிலும், sekkizharresearchcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஏப்.19 ஆகும். போட்டிக்கான பரிசுகள் வழங்கும் இடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் ஜூலை 2-ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News