Wednesday, April 3, 2019

விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு: 250 விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தியதில் தவறு செய்த 250-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அரசுத் தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது.


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சி இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்விலும் தேர்ச்சிப் பெற வேண்டும்.


இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான முடிவுகளை அந்தந்த பயிற்சி நிறுவனம் மூலம் மார்ச் 1-ஆம் தேதி வெளியிட்டது.
இதையடுத்து வெளியான தேர்வு முடிவுகள் குறித்து அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வினை முதலாம் ஆண்டு மாணவர்கள் 5,091 பேரும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 6,539 பேரும், ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் 5,420 பேரும் என மொத்தம் 17,050 பேர் எழுதினர்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செப்டம்பர் மாதம் முடிவடைந்து தேர்வு முடிவுகளை வெளியிடத் தயார் செய்தோம். அப்பொழுது ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 50 மதிப்பெண்களும், அனைத்து மாணவர்களின் விடைத்தாளிலும் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 250 விரிவுரையாளர்கள் இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அரசுத் தேர்வுத் துறை பரிந்துரை அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் விவரங்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News