Tuesday, April 9, 2019

75 மையங்களில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கியது

தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
413 மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டிய நிலையில் 75 மையங்களில் மட்டுமே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9, 800 மாணவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது . ஆனால், நீட் மையங்களில் செய்து தரப்படும் கணினி வசதிகள், இணைய வசதிகள் உள்ளிட்டவற்றுக்காக, பள்ளிக் கல்வித் துறையின் ரூ. 20 கோடி நிதியுதவி கிடைக்கப் பெறாததால் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், நிதிப் பற்றாக்குறையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப மார்ச் 25-ஆம் தேதி இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அரசின் இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (ஏப். 8) தொடங்கியது. பள்ளிக்கல்வித் துறை தேவையான பயிற்சியாளர்களை நியமிக்காத காரணத்தால் 338 மையங்களில் இன்னும் பயிற்சி தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் வரும் மே 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மீதமுள்ள மையங்களிலும் இலவச நீட்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News