ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்று, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வை தொடங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாகவும், அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வயது கி.மு. 905 என்றும், மற்றொன்றின் வயது கி.மு.791 எனவும், அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சிவகளையில் கண்டெடுத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 395 ஆண்டு பழமையானவை என்றும்தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அகழாய்வு முடிவுகள்படி தமிழ் மொழியே இந்தியாவின் மிகப் பழமையான மொழி என தெரியவருவதாகவும், கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்தக்கட்ட அகழாய்வு பணி குறித்து தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.