Monday, April 1, 2019

களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..

பள்ளியில் ரோபோக்கள் மூலம் பாடம் விரைவில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.



கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்கேஜி, யூகேஜி, வெளிநாட்டு சுற்றுலா என பல அசத்தலான விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகியான அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் பின்னர் செய்தியார்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆண்டு ரூ.28 லட்சத்து 757 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகுப்பறைகளிலும் கணினிகள் வைக்கப்பட்டு, அதில் இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அடுத்த கல்வியாண்டில் 28 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.


அதேபோல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷூக்கள் வழங்குவதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. கல்வித்துறையைப் பொருத்தவரை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பணச்சுமை இல்லாமல், மாணவர்கள் எதிர்காலத்தில் முழு கல்வி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் கல்வி பயில்வதற்கு மானியங்கள் வழங்குவதற்கும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


மேலும் மலைவாழ் பள்ளி மாணவ, மாணவிகள் தடையில்லாமல் கல்வி கற்க, ரோபோ ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். நீங்கள் என்ன கேட்டாலும் ரோபோ அதற்கு பதில் அளிக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News