வங்கிகளுக்கான ஆண்டுக் கணக்கு முடிவு, வார விடுமுறை போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் வியாழக்கிழமை (ஏப்.4) கிடைக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் (30 அல்லது 31) மாத ஊதியம் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதாலும், வங்கிகளில் ஆண்டுக் கணக்குகள் முடிவடையும் மாதம் என்பதாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் இதுவரை அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், மார்ச் மாத இறுதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தது. மேலும், ஆண்டுக் கணக்கு முடிவு காரணமாக ஏப்ரல் 1-ஆம் தேதியான திங்கள்கிழமையும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 2)முதல் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, வியாழக்கிழமை (ஏப்.4) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தன.