Tuesday, April 30, 2019

ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.துணைவேந்தர் தகவல்


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 8 ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக துணைவேந்தர் கே. பிச்சுமணி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் கூறியது: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணு ஊடகவியல், கடல்சார் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பயோ டெக்னாலஜி, எம்.காம் ஆகிய 8 பிரிவுகளில் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நிகழாண்டு முதல் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.


ரூ. 2000 உதவித் தொகை: இதில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இலவசம். ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவோரில் முதல் 3 ஆண்டுகள் முடித்தவுடன் வெளியேறும் மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதுநிலை படிப்பைத் தொடரலாம். ஒருங்கிணைந்த படிப்பு பயனுள்ளதாக இருப்பதால், இதில் சேருவோரில் 10 சதவீத மாணவர்களே இளநிலை பட்டத்தோடு வெளியேறுகின்றனர். எஞ்சிய அனைவரும் 5 ஆண்டுகள் படிப்பை முழுமையாக முடிக்கின்றனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, சில படிப்புகளுக்கு இந்த ஆண்டு 2 மடங்கிற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒருங்கிணைந்த படிப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


புதிதாக 2 படிப்புகள்: இந்த ஆண்டு புதிதாக இளநிலை நீர் வேளாண் இயல் தொழில்நுட்பப் படிப்பு (பி.வொக்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய இந்த படிப்பின் முதல் ஆண்டு முடிவில் சான்றிதழும், 2-ஆவது ஆண்டு முடிவில் டிப்ளமா சான்றிதழும், 3-ஆவது ஆண்டின் முடிவில் பட்டப்படிப்புக்கான சான்றிதழும் வழங்கப்படும். இந்தப் படிப்பைப் பொருத்தவரை, ஒரு மாணவர் 2-ஆவது ஆண்டு முடித்த பிறகு வெளியேறிவிட்டு, அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைந்து 3-ஆவது ஆண்டு படிப்பை தொடரலாம்.
இதேபோல, டயாக்னஸ்டிக் லேபரட்டரி ஓர் ஆண்டு டிப்ளமா படிப்பும் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, திருநெல்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனையுடன் பேசி வருகிறோம். இந்த 2 படிப்புகளுக்குமே பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் உதவி கிடைக்கிறது. லேபரட்டரி படிப்புக்கு பிளஸ் 2-வில் அறிவியல் பிரிவில் படித்திருக்க வேண்டும். பி.வொக் பாடப்பிரிவுக்கு பிளஸ் 2-வில் எந்தப் பிரிவில் படித்திருந்தாலும் சேரலாம்.


ஆன்லைன் விண்ணப்பம்: நிகழாண்டு முதல் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம். மத்திய மனிதவளத் துறை கொண்டுவந்துள்ள ஆன்லைன் படிப்பு பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மாணவர் ஏதாவது ஒரு பாடப்பிரிவை ஆன்லைன் மூலம் படித்து ஆன்லைனில் தேர்வெழுதலாம். இந்த ஆண்டு முதல்கட்டமாக 70 பேர் ஆன்லைன் மூலம் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 630 பேர் ஆன்லைன் தேர்வு எழுதியிருக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல் அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு பருவத்திலும் ஏதாவது ஒரு பாடப்பிரிவை ஆன்லைனில் படிக்க வேண்டும்.


இதேபோல, பிஎம்எம்எம்என்எம்டிடி திட்டத்தின்கீழ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் தரம் மற்றும் தகுதியை மேம்படுத்துவதற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ. 11.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், முதல் 2 ஆண்டுகளுக்கான தொகை வந்துவிட்டது. இத்திட்டத்தின்படி, 150 புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் 36 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் பள்ளி ஆசிரியர்கள், 4,600 பேர் கல்லூரி ஆசிரியர்கள்.
ரூ.50 கோடி பெற தகுதி: ரூஸா திட்டத்தின்கீழ், நிகழாண்டு ரூ. 2 கோடி கிடைத்துள்ளது. அடுத்த திட்டத்துக்கு ரூ. 50 கோடி கேட்கவுள்ளோம். பல்கலைக்கழகம் ஏ -கிரேடு தரத்தைப் பெற்றுள்ளதால், ரூ. 50 கோடியைப் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளது.


இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த படிப்புகளில் என்.சி.சி. (தேசிய மாணவர் படை) கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறோம் என்றார் அவர். அப்போது, பல்கலைக்கழகப் பதிவாளர் சந்தோஷ் பாபு உடனிருந்தார்.

Popular Feed

Recent Story

Featured News