1.1 இசைக்கருவிகள்
சிங்கப்பூரில் வழிபாட்டு முறையின்போது இசைக்கப்படுகின்ற இசைகள் தமிழிசையோடு தொடர்பு கொண்டதாகவே இருக்கின்றன. ஊஞ்சலாட்டோடு மாலை மாற்று விழா நடைபெறும்போது இசைக்கப்படும் இசைக்கருவிகள் நெஞ்சை நெகிழ வைப்பன எனலாம். தோற்கருவிகள், வெண்கலக்கருவிகள், ஊதுகொம்புகள், நாதஸ்வரம், மேள தாளங்கள் என எழுப்பப்படுகின்ற ஒலிகளில் தமிழிசையின் தொன்மம் விரவியே உள்ளன.
தெய்வங்களை இன்னிசையால் பாடியும், இசைக்கருவிகளால் இசைத்தும் வணங்குவது தமிழிசை மரபு எனலாம். குழுவாக இணைந்து ஒத்தக் கருவிகளைப் பாங்குடன் இசைப்பதை பண்பாடாகக் கொண்டிருந்தமை புலனாகிறது.
மனதை இலயிக்கவைத்து ஒன்றிய உணர்வை உள்ளத்தில் ஏற்படுத்தி இறையருளின் அநுபூதியை இசைக்கருவிகளால் எழுப்பி ஆரவாரம் மிக்க இன்னிசை ஒலிகளை எழுப்பி மகிழும் தமிழரின் தமிழிசைப் பரவல் எல்லை கடந்தும் ஒத்த உணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருவது மனங்கொள்ளத் தக்கதாகும்.
திருக்கோயில்களில் பொதுவாக பலவகை இசைக்கருவிகள் முழக்கப்படுகின்றன. இதனை பாரம்பரிய இசைக்கருவிகள் என்றும் அழைப்பர். பன்னிரு நரம்பு யாழ், அறிவிப்பு மணி, குமுதாளம், ஒத்து, தாரை, தவுல், வீரமுரசு (டமாரம்), மகுடி, சங்கு போன்றவை பாரம்பரிய இசைக்கருவிகளாகும். முற்காலத்தில், பகையரசரை வென்ற மன்னர் ‘எக்காளம்’ என்ற இசைக்கருவியை இசைத்து மகிழ்வர்.
பாரம்பரியத்தை பறைசாற்றும் இசைக்கருவிகளும் பற்பலவாகும். சந்திரவளைவு, தப்பு, கொம்பு, பம்பை, துடி, உடுக்கை, உருமி, கிடுகிட்டி என்பர். இவற்றுள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தது ‘தவுல்’ என்னும் தோற்கருவி. இதனை, சிங்கப்பூரில் வழிபாட்டு முறையின்போது ஒருங்கிசைத்து மிகு ஒலியோடு இசைக்கின்ற பான்மை கண்ணுக்கும் கவினுக்கும் உகந்தது எனலாம்.
மரபுவழியாகத் தொடர்நிகழ்வின்போது பண்பாட்டுடன் மக்கள் தங்கள் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளும் வழிகளை முறையாக அறிந்தே வைத்திருந்தனர். திருக்கோயில்களில் இறைவனுக்கு மூலவருக்குச் செய்யும் அலங்கார அபிஷேகங்களும், வழுத்துகின்ற இசைக்கருவிகள் இசைத்து பாடித் துதித்து வணங்கும் முறைகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாகக் காணலாம்.
இறைவனுக்குச் செய்யும் திருவுடல் சேவை, திருமணப்பேறு, திருக்காப்பு, கும்ப அபிஷேகம், ஒன்றுகூடல் விழாக்கள் போன்ற மகிழ்வுக்கான கூடல்களில் திருச்சங்கமமாய் இசைக்கருவிகளோடே இசைச்சங்கமமும் நடத்தப்பட்டு வருகின்றன.
வணிகத்தின் பொருட்டாக சென்ற நகரத்தார் மரபினர் திருக்கோயில்கள் எழுப்பி, தமிழர் வழிபாட்டு முறைகளையும், தைப்பூசம் முதலான பல திருவிழாக்களை நிகழ்த்தும் முறைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை ஒப்புநோக்கத்தக்கது.
இசைக்கருவிகள் பல உள்ளன. ஆகுளி, இடக்கை, இலயம், உடுக்கை, ஏழில், கத்தரிகை, கண்டை, கரதாளம், கல்லலகு, கல்லவடம், கவிழ், கழல், காளம், கின்னரம், கிண்கிணி, கிளை, குடமுழா, குழல், கையலகு, கொக்கரை, கொடுகொட்டி, கொட்டு, கொம்பு, சங்கு, சச்சரி, சலஞ்சலம், சல்லரி, சிலம்பு, சின்னம், தகுணிச்சம், தக்கை, தடாரி, தட்டழி, தண்டு, தண்ணுமை, தமருகம், தாரை, தாளம், துத்திரி, துந்துபி, துடி, தூரியம், திமிலை, தொண்டகம், நரல்கரிசங்கு, படகம், படுதம், பணிலம், பம்பை, பல்லியம், பறண்டை, பறை, பாணி, பாண்டில், பிடவம், பேரிகை, மத்தளம், மணி, மருலம், முரசு, முரவம், முருகியல், முருடு, முழவு, மொந்தை, யாழ், வங்கியம், வட்டளை, வயிர், வீணை, வீளை என பலவகைத்தனவாம்.
2.1 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழிபடுதெய்வமும், பண்பாட்டு பரவலும்
- சிங்கப்பூர் – மாரியம்மன், முருகன் தெய்வ வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
- தாய்லாந்து – தலைநகரமான பாங்காக்கில் மாரியம்மன் வழிபாடு சிறப்பு பெறுகிறது.
- லாவோத்சு – ‘வாட்போ’ என்னும் லிங்கபர் வழிபாடு உள்ளது. இது
- மலைமேல் அமைந்துள்ள கோயிலாகும்.
- கம்போடியா – அங்கோர்வாட் கோயிலில் விஷ்ணு வழிபாடு உள்ளது.
- மியான்மர் – காளியம்மன் வழிபாடு
- கொரியா – ராதா ஷாம்சுந்தர் மந்திர், லஷ்மி நாராயண ஸ்வாமி கோயில்கள் சியோலில் உள்ளன. வழிபடு தெய்வம்
கிருஷ்ணர்.
- ஹாங்காங் – விஷ்ணு வழிபாடு உஜியாங்பூ (Uijeongbu) என்னும் இடத்தில் உள்ளது.
- பிலிப்பைன்ஸ் – தலைநகரான மணிலாவில் இஸ்கான் கோயில் உள்ளது.
கிருஷ்ண வழிபாடு.
திமோர் – தில்லி (Dilli) மாவட்டத்தில் கிரிநாதர், புறகிரிநாதர் என தமிழ்க் கோயில்கள் உள்ளன.
ஜப்பான் – சரஸ்வதி வழிபாடு
இவை அனைத்தும் சிறுதெய்வம், பெருந்தெய்வம் எனும் வகைப்பாட்டில் தமிழகத்தில் உள்ளன. வழிபாடுகளின்போது மேளம், நாதஸ்வரம், பம்பை, உடுக்கை, ஊதுகொம்பு, வீணை, யாழ் எனும் இசைக்கருவிகளே பயன்பாட்டில் இசைத்து வரப்படுகின்ற தன்மையை பாரம்பரிய தமிழிசைப் பரவலாகக் கருத இயலும்.
3.1 நகரத்தார்களின் கோயில் வழிபாடு
1824 ஆம் ஆண்டு சிங்கப்பூர், பினாங்கு போன்ற பகுதிகளில் தண்டாயுதபாணி கடவுளின் கோயில் சிறப்புற்று விளங்கியது. இக்கோயில்களில் குறிப்பாக நகரத்தார்களின் உருவாக்கத்தால், தைப்பூசம், ஆடிவெள்ளி, சித்திரைத் திருவிழா, போன்றவை பொலிவு பெற்றன. இவ்விழாவின்போது இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. தமிழிசைக் கருவிகளே பயன்பாட்டில் இருந்தன என்பது சிறப்புக்குரியதாகும். சிங்கப்பூரில் 1859இல் பல சிறப்பான நிகழ்வுகள் திருக்கோயில்களில் நிகழ்ந்தன. இத்தகைய நிலை பண்பாட்டை வெளிப்படுத்துவன எனலாம். பன்னிரண்டு கார்த்திகைகளின் போதும், தைப்பூசத்தன்றும் பல நூறு பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
மலேசியாவில் உள்ள தண்ணீர் மலைக்கோயிலை 1857 ஆம் ஆண்டு நகரத்தார்கள் கட்டினார்கள். அனைத்துத் தண்டபாணி கோயில்களிலும், திருவிழாக்களின் போது காவடி எடுத்ததும், அன்னதானமும் நடைபெற்று வருவதோடு இன்னிசைக் கருவிகளில் தோற்கருவி, நரம்புக்கருவி, துளைக்கருவி என மூவகைக் கருவிகளில் பாங்குடன் இசைப்பது மகிழ்வுக்குரியதாகும்.
தெற்கு வியட்நாமில் 1880 ஆம் ஆண்டு அளவில் சய்கோனில் நகரத்தார்கள் தண்டாயுதபாணிக்குக் கோயில் கட்டியதோடு 1979 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆறு கோடிக்கும் அதிகமான சொத்து வருவாயுள்ள நிலையில் நகரத்தார் தங்கள் ஆலயப் பணிக்கு அறவழி ஈடுபாட்டினை வழங்கியுள்ள திறம் போற்றத்தக்கது. ஆன்மிக உணர்வு ஆலய அறப்பணியோடு தொடங்கி, நாள்தோறும் நான்கு காலப் பூசை நிகழ்வோடு, இசைக்கருவிகளும் பாங்கோடு அமைந்து தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்டுவன எனலாம்.
சைவ சமயக் கருத்துக்களையும், தேவார ஓதுவார்களையும் இந்தியாவில் இருந்து வரவழைத்து போற்றுகின்றனர் நகரத்தார். இந்நிகழ்வு இசையோடு இயைந்த ஆலய வழிபாட்டுப்பணி தமிழிசைப் பரவலுக்கு முன்னோடியாக வழிவகுத்தது எனலாம்.
நகரத்தார் மலேசியா, தாய்லாந்து, தெற்கு வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான் போன்ற கடல்கடந்த நாடுகளில் வணிகத்தொடர்பை ஏற்படுத்தியதோடு பண்பாட்டு பாரம்பரியமானது வழிபாட்டு நோக்கில் இசையோடு இணைந்து இருந்த பான்மை புலனாகிறது.
4.1 தமிழர்களின் பண்பாட்டுப் பதிவு
தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் இந்துமதம் பெரும்பாலும் பொதுவானதாகக் கருதப்பட்டு வருகின்றமை புலனாகின்றது. கம்போடியாவில் கிடைத்த வடமொழிக் கல்வெட்டுக்கள் இராமாயணத்தைப் பற்றி பல்வேறு குறிப்புக்களைத் தருகின்றன.
இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தினை கி.பி. 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் அமராவதியிலுள்ள கலைப் பண்பாட்டில், வட இந்திய கிரேக்க பாதிப்பு மிகுந்துள்ளதைக் காணலாம். பல்லவர் பண்பாட்டுத் தாக்கம், பௌத்தக் கலைகளின் பாதிப்பு, சோழர்களின் கலை பண்பாட்டு ஆதிக்கத்தைக் காண முடிகின்றது என ஜீ ஜான் சாலமோன் குறிப்பினால் அறிய இடமேற்படுகிறது. தொல்லியல் துறை சார்ந்த பண்பாட்டுக்கூறுகளை இனங்காண்பதின் வழி தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை அறிய இயலும்.
4.2 உலகெங்கும் தமிழர்கள்
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையினை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தின் மூலம் அறிய இயலுகிறது. 2001ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தாய்லாந்து – 2000, சிங்கப்பூர் – 120000, மியான்மர் – 250000, மலேசியா – 160000, இந்தோனேசியா – 50000, மொரிசியஸ் – 100000 என தமிழர்கள் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்.
5.1 இறைவழிபாட்டில் இசைக்கருவிகள்
சிவபெருமான் கையில் தமருகம், கண்ணபிரான் கையில் குழல், சரஸ்வதி தேவியின் கையில் வீணையும் உள்ளது. நடராசர் தத்துவமே உலக இயக்கம் என்பர். நடன அவயத்தோடு இசையோடு உலகை இயக்கும் தத்துவம் இரண்டறக் கலந்தே உள்ளன. திருக்கோயில்களில் நாள்தோறும் நிகழும் கால வழிபாடுகளில் இசைக்கருவிகளும், பாடல்களும், ஆடல்களும் ஆன்ம இலயத்தை ஏற்படுத்துவன.
- குரல் – காற்று வாத்தியத்தின் அமைப்பை ஒத்தது.
- காது – தோல் வாத்தியத்தின் அமைப்பை ஒத்தது.
- உள்காது – தந்தி வாத்தியத்தின் அமைப்பை ஒத்தது.
எல்லா இசைமுறைக்கும் பொதுவானது ஏழிசை. நம் உடற்கூறுகளிலிருந்து ஏழிசை பிறக்கும்.
குரல் – ச – தொண்டை, துத்தம் – ரி – நாக்கு, கைக்கிளை – க – மேல் அண்ணம், உழை – ம – தலை, இளி – ப – நெஞ்சு, விளரி – த – நெற்றி, தாரம் – நி – மூக்கு.
கோயில்களில் தேவாரம் இசைக்கப்படுகிறது. இறைவனைப் பற்றிய துதிப்பாடல்களாகிய மாலை எனவும் பொருள்கொள்ளலாம். குறிஞ்சி யாழில் 32 திறங்களும், மருத யாழில் 16 திறங்களும், தாரப்பணிறம், பையுள், காஞ்சி, பருமலை ஆகிய மூன்று திறமும் சேர்த்து 103 பண்களாக விரிகின்றன.
கோயில் திருவிழாக்களில் பறை இசைக்கருவி தொன்மையான இசைக்கருவியாக விளங்கி வருகிறது. இசையும், தாளமும் பழங்காலந்தொட்டே தமிழர் பண்பாட்டோடு இணைந்தே நிற்பன.
தாளங்கள் ஏழு அங்கம் ஜாதி எண்ணிக்கை
துருவ தாளம் 1011 சதுரங்கம் 14
மட்டியதாளம் 101 சதுரங்கம் 10
ரூபகதாளம் 01 சதுரங்கம் 10
ஜம்பதாளம் 10 மிஸ்ரம் 10
அடதாளம் 1100 கண்டம் 14
திருபுடைதாளம் 100 திஸ்ரம் 7
ஏகதாளம் 1 சதுரங்கம் 4
பாடுபறை பல இயம்பப் பல்உருவம் பெயர்த்துத் தில்லைக் கூத்தனும் திருநடனம் ஆடினச் செய்தியால் பறைக்கருவியின் தன்மை புலனாகிறது. மாயோன் ஆடிய குடக்கூத்தும் பறையுடன் ஆடியது என்பர்.
6.1 தொகுப்புரை
தொல்காப்பியர் ஐவகை நிலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு நிலத்திற்கும் யாழ், பண், கடவுள், பறை என்று அமைத்துள்ளார். இவை, ‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை’என்பனவாகும்.
‘அளபிறந்து யிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்’ - (தொல் – எழுத்து – நூ. 33 )
நிலங்களின் அடிப்படையிலான மக்கள் வழக்கில் இருந்து செவி வழியாக வந்த இசைமுறை தமிழிசை எனலாம். யாழ், குழல், தோற்கருவிகள் என தெய்வ வழிபாட்டு முறைகளில் இசைக்கருவிகள் கலந்தே உள்ளன. சைவம், வைணவம் என இருபிரிவாக இருந்தாலும், கலைப்பணியின் காரணமாக ஒன்றிய நிலைபேற்றை ஏற்படுத்தும் தன்மையன எனலாம்.
இதனை சாமவேதத்தின் மூலம் அறியலாம். சாமவேதம் ஷட்விம சப்பிரமாணம் 5ஆம் அத்தியாயம் 10வது கீதம் அல்லது சுருதி வாக்கியம் இதுவாகும்.
“தேவ தாயத நாதி கம்பந்தே தைவதா;
பிரதி மஹாஸந்தி ருதம்தி காய்ந்நிக்ருந்
யந்தி ஸ்புடம்தி ஸ்வித்யம் த்யுன் மீலன
நீதிநீ; கவந்தாக்ரு ஸந்தே விஜலே னச்ச
பரித் ருச்யதே”
சிற்ப சாஸ்திர ரீதியாக கட்டப்பட்ட இறைவனின் ஆலயங்கள், சிற்பாச்சாரியின் வார்த்தைக்கு நடுங்கும். பிரதமை ரூபமாயுள்ள தெய்வங்கள் சிரிக்கும். விக்ரஹங்கள் அழவும் செய்யும். பாடு என்று ஏவினால் பாடவும் செய்யும். நடனமிடும். வாய் திறக்கும், மூடும். ஓரிடம் விட்டு வேறிடத்துக்கு நடந்து செல்லும் என்பதாகும்.
இத்தகு தெய்வசிற்பங்கள் விளங்கி நிற்கின்ற திருக்கோயில்களில் இசைக்கும் இசைக்கருவிகளும் உணர்வுபூர்வமாகவே அமைந்து பண்பாட்டு பரவலைத் தருவன.
முனைவர் ஏ.யோகசித்ரா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசினர் மகளிர்
கலைக்கல்லூரி,
வாலாஜாபேட்டை-632513
வேலூர் மாவட்டம்
9487106429
SOURCES: http://www.isaitamiljournal.com