Sunday, April 28, 2019

மெய்ம்மயக்கம்

மெய்ம்மயக்கம்
மொழி முதல் எழுத்துகளையும் மொழி இறுதி எழுத்துகளையும் அறிந்துகொண்ட நாம் அடுத்து அறிந்து கொள்ள வேண்டியது மெய்ம்மயக்கமாகும்.

மயக்கம் என்றால் கலந்து வருதல் என்று பொருள்.

மெய்ம்மயக்கம் என்றால் சொற்களின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவதாகும். அதாவது ஒரு மெய் எழுத்துக்குப் பக்கத்தில் மற்றொரு மெய் எழுத்து வந்து நிற்றலாகும்.

எடுத்துக்காட்டாக, பக்கம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லில் க் என்ற மெய்யெழுத்துக்குப் பக்கத்தில் உள்ள க என்பதைப் பிரித்துப் பாருங்கள். பக்க்+அம் என அமையும். இச்சொல்லில் க்க் என இரண்டு மெய்யெழுத்துகள் வந்துள்ளதைக் காணலாம். 

இவ்வாறு ஒரு சொல்லில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மெய்கள் அருகருகே வருவதனை மெய்ம்மயக்கம் என்பர்.

இம்மெய்மயக்கம், உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இரண்டு வகைப்படும்.



உடனிலை மெய்ம்மயக்கம்

உடனிலை மெய்ம்மயக்கம் என்பது, சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து இரட்டித்து வருவதைக் குறிக்கும். உதாரணத்திற்கு அச்சம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

அச்சம் என்ற சொல்லில் உள்ள ச் என்பது அச்ச்+அம் என இரட்டித்து வந்துள்ளதைக் காண்க.

இவ்வாறு ஒரு மெய்யெழுத்து அடுத்தடுத்து(உடனுடன்) வருவதை உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படுகிறது.

இவ்வாறு (ரழ) தவிர பிற பதினாறு மெய்யெழுத்துகளும், உடனிலை மெய்ம்மயக்கத்தில் அமைகின்றன.

மேற்கண்ட பதினாறு எழுத்துகளுள், க, ச, த, ப என்ற நான்கு மெய்யெழுத்துகள் உடனிலை மெய்ம்மயக்கத்தில் மட்டுமே அமைகின்றன. இவை வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வாரா.

பிற மெய் எழுத்துகள் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திலும் அமைகின்றன.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ஒரு சொல்லின் இடையில் ஒரு மெய்யெழுத்திற்கு பக்கத்தில் வேறு ஒரு மெய்யெழுத்து வந்து நிற்பதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படுகிறது.

உதாரணத்திற்கு அங்கம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

இந்த அங்கம்(அங்க்+அம்) என்ற சொல்லில் ங் என்ற எழுத்திற்குப் பக்கத்தில் க் என்ற எழுத்து இணைந்து வந்துள்ளதைக் காண்க.

இவ்வாறு ஓர் எழுத்துக்குப் பக்கத்தில் அதே எழுத்து அல்லாமல் வேறுவொரு எழுத்து வந்து இணைவது வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகும்.

இவ்வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் க், ச், த், ப் என்ற நான்கு எழுத்துகள் தவிர பிற பதினான்று மெய் எழுத்துகளும் அமைகின்றன.

உடனிலை மெய்ம்மயக்கத்தில் மட்டும் அமையும் எழுத்துகள்: 04 (க், ச், த், ப்)

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் மட்டும் அமையும் எழுத்துகள்: 02 (ர், ழ்)

உடநிலையிலும் வேற்றுநிலையிலும் அமையும் எழுத்துகள்: 12 (ங், ஞ், ட், ண், ந், ம், ய், ல், வ், ள், ற், ன்)


ஈரொற்று மெய்ம்மயக்கம் அல்லது ஈரொற்று உடனிலை மெய்ம்மயக்கம்

உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்றில்லாமல் ஈரொற்று மெய்ம்மயக்கம் அல்லது ஈரொற்று உடனிலை மெய்ம்மயக்கம் என்ற ஒன்றும் உள்ளது.

தனி சொல்லிலோ அல்லது கூட்டு சொற்களிலோ புள்ளி பெற்ற இரண்டு மெய்கள் சேர்ந்து வருவதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.

உதாரணமாக, தேர்க்கால் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இத் தேர்க்கால் என்ற சொல்லில் ர்க் என்ற மெய்யெழுத்துகள் இணைந்து வந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு இரண்டு புள்ளி வைத்த எழுத்துகள் இணைந்து வருவதனையே ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.

இதனையே ஈரொற்று உடனிலை மெய்ம்மயக்கம் என்றும் கூறுவர்.

ஈரொற்று உடனிலையில் முதல் மெய்யானது ய், ர், ழ் என்ற மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும். இரண்டாவதாக வரும் மெய் எழுத்து வேறுவேறாக இருக்கும். அம்மெய் எழுத்துகள் இரட்டித்து வரும். 

உதாரணமாக, நாய்க்கா, வேர்ச்சொல், வாழ்த்து என்ற சொற்களைக் காணலாம். 

ய் – நாய்க்கால் – ய்க்க்
ர் - வேர்ச்சொல் – ர்ச்ச்
ழ் – வாழ்த்து - ழ்த்த்

இச்சொற்களில், முதலில் ய், ர், ழ் என அமைந்து, இந்த ய், ர், ழ் எழுத்துகளை அடுத்து வந்த எழுத்துகள் இரட்டித்து வந்துள்ளதைப் பாருங்கள்.

இவ்வாறு அமைவதனையே ஈரொற்று உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

Popular Feed

Recent Story

Featured News