Monday, April 8, 2019

தேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சை: தேர்தல் ஆணையம்

தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்கள் பணிக்காலத்தில் ஏதேனும் உடல் நலக்குறைவை சந்தித்தால் அவர்களுக்கு உயரிய நிலையில் இலவசமாக சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படுகின்ற உடல்நலக் குறைவுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விபத்து, இருதய பாதிப்புகள் போன்ற எந்தவிதமான உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சிகிச்சை செலவுகளுக்காக ஒரு நபருக்காக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கு மேல் ரூ.1 லட்சம் வரை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர் செலவு செய்யலாம். ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ள செலவுகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த பின்னரே செலவு செய்ய இயலும். தேர்தல் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிக்காகவும் பணியாளர் வீட்டில் இருந்து புறப்படுவது முதல் வீடு அல்லது அலுவலகத்திற்கு திரும்பும் வரை ஏற்படும் உடல் நலக் குறைவுகளுக்கும், விபத்துகளுக்கும் இந்தச் சலுகையை பெற்றுக்கொள்ள இயலும்.

இந்த தேர்தல் பணியாளர்கள் பட்டியலில் போலீஸார், மத்தியப் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். தேர்தல் மோதலில் பாதிக்கப்பட்டாலோ, உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ அவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ஆகும்.

Popular Feed

Recent Story

Featured News