Tuesday, April 2, 2019

அண்ணா பல்கலைக்கழகத்தை மண்டலங்களாக பிரிக்கக் கோரிய வழக்கு: உயர்கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

அண்ணா பல்கலைக் கழகத்தை மண்டலங்களாக பிரிக்கக் கோரிய வழக்கில் உயர்கல்வித் துறை செயலர், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் தாக்கல் செய்த மனு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு அண்ணா பல்கலைக் கழகத்தை சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை என 5 மண்டலங்களாகப் பிரித்தது. இதனால், கிராமப்புற மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பல்கலைக் கழகத்தை எளிதில் அணுக முடிந்தது. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் 5 மண்டலங்களும் மீண்டும் பல்கலை.யின் கீழ் இணைக்கப்பட்டன.


இதன்காரணமாக, மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் பாடப்புத்தகங்களில் ஏற்பட்ட மாற்றத்தால், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு முடிவுகளில் குழப்பம் ஏற்படாமல் இருக்கும் வகையில், அண்ணா பல்கலைக் கழக மண்டலங்களை திருச்சி, மதுரை, நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் மீண்டும் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில், திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து உயர்கல்வித்துறை செயலர், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Popular Feed

Recent Story

Featured News