Wednesday, April 3, 2019

உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி கல்விச் சீர்திருத்தம் : விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

இந்திய இளைஞர்களின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்தும் வகையில், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு தற்போது ஒதுக்கப்பட்டு வரும் 4 சதவீதம் நிதியை 6 சதவீதமாக உயர்த்தி, கல்விச் சீர்திருத்த மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த புதிதாக அமையவிருக்கும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தினார்.


வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் இளைய தலைமுறையினரைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகின்றது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சிறந்து விளங்கும் கல்வி, தொழில் நிறுவனங்களில் இந்திய இளைஞர்கள்தான் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
இந்திய இளைஞர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே, வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த இளை

ஞர்களுக்கு இணையான கல்வி, வாழ்க்கைத் தரத்தைப் பெற்று உள்ளனர். சமூக ஏற்றத்தாழ்வுகளை கல்வி மூலம்தான் சீரமைக்க முடியும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவை முன்னேற்ற பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 25 சதவீதமாகவும், அமெரிக்காவில் 85, தென் கொரியா, ஆஸ்திரேலியாவில் 100 சதவீதமாகவும் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகியும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 4 சதவீதம் தான் ஒதுக்கப்படுகிறது.
இளம் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தொகையை 6 சதவீதமாக உயர்த்த புதிதாக அமையவிருக்கும் மத்திய அரசு முன்வர வேண்டும். இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்த வேண்டும் என்றார் ஜி.விசுவநாதன்.


விழாவில் அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் ஜீ. பர்ஜீஸ் பேசியது:
இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையில் அரசியல், கலாசார, வர்த்தக உறவுகள் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. உயர்கல்வித் துறையில் மாணவர், ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர், மாணவர் உறவுகள், தொழில்நுட்ப அறிவாற்றல் பரிமாற்றம் ஆகியவை இணக்கமான சூழலை உருவாக்கி உள்ளன.
கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, இணையதளப் பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை உள்பட பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்புகள் ஏற்படுள்ளன.


அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கி வரும் கல்வி உதவித்திட்டங்களில் இந்திய மாணவர்கள்தான் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் எஸ்.அபயா ஸ்ரீஸ்ரீமால், இணை துணைவேந்தர் என்.சம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular Feed

Recent Story

Featured News