Tuesday, April 30, 2019

விஐடி பி.டெக்., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், முதல் 10 இடங்களை கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள் பிடித்துள்ளனர். இதுகுறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக் (2019) பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த 10-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், துபை, குவைத், மஸ்கட் ஆகிய இடங்களிலும் கணினி முறையில் நடத்தப்பட்டன. இந்த நுழைவுத் தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 462 மாணவ, மாணவிகள் எழுதினர்.


இத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சாய் சாகேதிகா செக்கூரி முதலிடமும், ஆந்திர மாணவர் குரஜால ஜோயல் மோசஸ் இரண்டாமிடமும், ராஜஸ்தான் மாணவர் துஷார் ஜெயின் மூன்றாமிடமும் பிடித்தனர்.
மாணவர்கள் திஷாங்க் ஜிண்டால் (ஹரியாணா) 4-ஆம் இடமும், ஜி.பாலா ரத்னசாமி (ஆந்திரம்) ஐந்தாமிடமும், தாமஸ் ஜேக்கப் (கேரளம்) ஆறாமிடமும், யாஷிகா பட்டோடியா (மேற்கு வங்கம்) ஏழாமிடமும், ராகவன் கோபாலன் (தமிழகம்) எட்டாமிடமும், மோகித் குமார் கோயல் (ராஜஸ்தான்) 9-ஆவது இடமும், சித்தார்த் கிரி (உத்தரப் பிரதேசம்) பத்தாமிடமும் பிடித்துள்ளனர்.
விஐடி நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, ரேங்க் அடிப்படையில் மே 9 முதல் நடைபெற உள்ளது.

நுழைவுத் தேர்வில் 1 முதல் 10 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 9-ஆம் தேதியும், 10,001 முதல் 30 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 10-ஆம் தேதியும், 30,001 முதல் 50 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 11-ஆம் தேதியும், 50,001 முதல் 70 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 13-ஆம் தேதியும், 70,001 முதல் 90 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 14-ஆம் தேதியும், 90,001 முதல் 1.10 லட்சம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 15-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளன. தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.


விஐடி-யின் ஜி.வி. பள்ளி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று விஐடியில் சேரும் மாணவ, மாணவியருக்கு பி.டெக் பட்டப்படிப்பின் 4 ஆண்டு காலமும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும், 101 முதல் 1000 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகின்றன.


இதேபோல், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் தலா ஒரு மாணவருக்கும், ஒரு மாணவிக்கும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் 100 சதவீத கல்விக் கட்டணச் சலுகை, உணவுடன் இலவச விடுதி வசதி ஆகியவற்றுடன் சேர்க்கை வழங்கப்பட உள்ளது. விஐடியில் 3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News