அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வு முறைகேடு விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அந்த மாணவர்களின் பட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் அப்பல்கலைக் கழக பணியாளர்கள் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில், அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது என கூறப்பட்டது.எழுதாதத் தாளில் தேர்வு
இதுகுறித்து விசாரிக்கையில், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் 40 பக்கங்களைக் கொண்ட விடைத்தாளின் ஓரிரு பக்கங்களை மட்டுமே எழுதிவிட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் கொடுத்துள்ளனர். அந்த விடைத்தாளை, தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர்.
எழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி, அந்த மாணவர்கள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். இதற்காக தேர்வு எழுதிய மாணவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் கையூட்டாக பெற்றுள்ளனர்.
விசாரணைக் குழு
இந்த முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலை அதிரடி
இதனிடையே, பருவத் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 130 மாணவர்களின் பட்டத்தை ரத்து செய்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அவர்களின் தேர்வு முடிவுகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்வு
பல்கலைக் கழகம் நிர்ணயித்த விசாரணைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பல மாணவர்கள் பாடங்களில் அரியர்ஸ் வைத்திருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த 130 மாணவர்களும் அரியர்சை முடித்துவிட்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.