Friday, April 26, 2019

மொழி முதல், இறுதி எழுத்துகள்

    எழுத்துகள் தனித்து நின்றும் தொடர்ந்து வந்தும் பொருள் தருவது சொல் எனப்படும். தனித்து நின்று பொருள் உணர்த்தும் சொல்லை ஓரெழுத்து ஒருமொழி என்பர்.

    ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் உணர்த்தும் சொல்லில், எழுத்துகள் முதலிலும் நடுவிலும் இறுதியிலும் எழுத்துகள் விரவி வரும். அவ்வாறு சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்றும், இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்றும் கூறுவர்.

 சொல்லின் இடையில் வரும் எழுத்துகளை இடைநிலைகள், மெய்மயக்கங்கள் என்று வகைப்படுத்துவர். தமிழ் எழுத்துகள் 247 சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை.

  சில எழுத்துகள் சொல்லின் முதலிலும் சில எழுத்துகள் சொல்லின் இறுதியிலும் சில எழுத்துகள் சொல்லின் இடையிலும் வருகின்றன அவற்றை இனிக் காண்போம்.

மொழி முதல் எழுத்துகள்
சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழி முதல் எழுத்துகள் என்பர்.

1. பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மொழி முதலில் வரும்.

2. க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ ஆகிய பத்து மெய் எழுத்துகள் மட்டுமே    மொழி முதலில் வரும். 

அவற்றுள் க, ச, த, ந, ப, ம என்னும் ஆறு மெய்களும் பன்னிரண்டு உயிரோடும் சேர்ந்து மொழிக்கு முதலாகி வரும்.

பன்னிரண்டு உயிருடன் சேர்ந்து வரும் ‘க்’ வரிசை சொற்கள்,

கடவுள், காடு, கிளை, கீற்று, குளம், கூட்டம், கெட்டான், கேடு, கைபேசி, கொடுக்கு, கோட்டை, கௌவுதல்.

பன்னிரண்டு உயிருடன் சேர்ந்து வரும் ‘ச்’ வரிசை சொற்கள்,

சட்டி, சாட்டை, சிவப்பு, சீப்பு, சுக்கு, சூடு, செக்கு, சேவல், சைகை, சொப்பு, சோழி, சௌபாக்கியவதி.

பன்னிரண்டு உயிருடன் சேர்ந்து வரும் ‘த்’ வரிசை சொற்கள்,

தம்பி, தார், திலகம், தீமை, துள்ளல், தூக்கம், தெய்வம், தேடினேன், தையல், தொண்டு, தோடு, தௌவை.

பன்னிரண்டு உயிருடன் சேர்ந்து வரும் ‘ந்’ வரிசை சொற்கள்,

நண்பன், நாக்கு, நிலம், நீட்டம், நுங்கு, நூல், நெடி, நேற்று, நைடதம், நொப்பு, நோக்கு, நௌவி.

பன்னிரண்டு உயிருடன் சேர்ந்து வரும் ‘ப்’ வரிசை சொற்கள்,

பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேய், பைதல், பொன், போது, பௌவம்.

பன்னிரண்டு உயிருடன் சேர்ந்து வரும் ‘ம்’ வரிசை சொற்கள்,

மனம், மாடு, மின்னல், மீன், முடிவு, மூக்கு, மெட்டி, மேற்கு, மையல், மொட்டு, மோகம், மௌவல்.

‘ங்’ என்ற மெய் எழுத்து ‘அ’ வோடு மட்டுமே சேர்ந்து மொழி முதலில் வரும்.

ஙனம் – அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம்

‘ஞ்’ என்ற மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ என்ற நான்கு உயிர் எழுத்துடன் சேர்ந்து மொழி முதலில் வரும்.

ஞமலி(நாய்), ஞாயிறு, ஞெகிழி(கொள்ளிக்கட்டை), ஞொள்கிறது(ஒலிக்கிறது)

‘ய்’ என்ற மெய் எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்ற ஆறு உயிர் எழுத்துடன் சேர்ந்து மொழி முதலில் வரும்.

யவனர், யார், யுகம், யூகி, யோகம், யௌவனம்(இளமை)

‘வ்’ என்ற மெய் எழுத்து அ, ஆ, உ,ஊ எ, ஏ, ஐ, ஒள என்ற எட்டு உயிர் எழுத்துடன் சேர்ந்து மொழி முதலில் வரும்.

வளம், வாழ்க, விருப்பம், வீடு, வெள்ளை, வேலை, வையம், வௌவுதல்(கவ்வுதல்)

உயிர் எழுத்துகள் -     12
ககர வரிசை      -     12
சகர வரிசை      -     12
தகர வரிசை      -     12
நகர வரிசை      -     12
பகர வரிசை      -     12
மகர வரிசை     -     12
ஙகர வரிசை     -     01
ஞகர வரிசை     -     04
யகர வரிசை     -     06
வகர வரிசை     -     08
மொத்தம்        -     103

இந்த 103 எழுத்துகள் மட்டுமே தமிழ்ச்சொற்களின் முதலில் வரும்


மொழி இறுதி எழுத்துகள்

சொல்லின் கடைசியில்(இறுதியில்) வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மொழி முதலில் வரும்.

உயிர்க் குறில்(அ, இ, உ, எ, ஒ) ஐந்தும் அளபெடையின்போது சொல்லின் இறுதியில் வரும்.

குறில் எழுத்துகள் மட்டுமன்றி ஏனைய உயிர் எழுத்துகளும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மொழி இறுதியில் வரும்.

சில, பலா, கிளி, தீ, சுடு, பூ, சே(ஒருவகை மரம்), தே(தெய்வம்), மலை, நொ
(துன்பம்), போ, கௌ(கவ்வுதல்)


ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய பதினொரு மெய்யெழுத்துகளும் மொழியின் இறுதியில் வரும்.

உரிஞ், மண், வெரிந்(முதுகு), மரம், காய், வேர், வேல், தெவ்(பகை), வாழ், வாள், பொன்

உயிர் எழுத்துகள்  -     12
வல்லின மெய்     -     05
இடையின மெய்   -     06
மொத்தம்           -     23

இந்த 23 எழுத்துகள் மட்டுமே தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும்

Popular Feed

Recent Story

Featured News