Tuesday, April 9, 2019

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதலுதவி பெட்டி தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முதலுதவி பெட்டி அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.



வாக்காளர்கள் அமைதியான சூழலில் வாக்களிக்கவும், முறைகேடு நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களிக்கும் போது சிலர் மயக்கமடையும் வாய்ப்பு உள்ளது.



எனவே, இதை தடுக்க வரும் மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதலுதவி பெட்டிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தல் வரை வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட் மட்டுமே தேர்தல் ஆணையம் அனுப்பி வந்தது.
தேர்தல் பொருட்களுடன் இதுவும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இதிலும் சில மாறுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்த முறை ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் ஒரு முதலுதவி பெட்டி அனுப்பப்படுகிறது.


இப்பெட்டியில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் 5, பாராசிட்டமல் மாத்திரைகள் 10, டைகுளோசிட் மாத்திரைகள் 10, பேண்டேஜ் துணி சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் போடப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்துக்கும் அனுப்ப வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் 5க்கும் மேல் உள்ள மையங்களில் ஒரு சுகாதார பணியாளரை பணியமர்த்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருவதால் வெயில் காரணமாக வாக்காளர்கள் மயக்கமடைவதை தடுக்கும் பொருட்டும்,


அதிக தலைவலியாலோ, பிற வலிகளாலோ பாதிக்கப்படும்பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்ய பாராசிட்டமல், டைகுளோசிட் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் தவறி கீழே விழுந்தாலோ அல்லது சிறு சிறு காயங்கள் ஏற்பட்டாலோ அவர்களுக்குக் கட்டுபோட பேண்டேஜ் துணிகளும் முதலுதவி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News