Wednesday, April 10, 2019

சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அராசணை ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி!


தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த (எஸ்.டி.) பேராசிரியர்கள் ஒருவர்கூட இதுவரைநியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.



சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தராததால், இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி குணநிதி, சுவாதி ப்ரியா ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதி, 'நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளை கடந்தும், தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படாது அதிர்ச்சி அளிக்கிறது. எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்காததை யாருமே கவனிக்கவில்லை. சட்டத்துறை அதிகாரிகளோ, சட்டக்கல்வி இயக்குநரோ, சட்ட அமைச்சரோ கவனிக்கவில்லை என்பதே உண்மை. இடஒதுக்கீட்டு கொள்கை அனைத்து நிலைகளிலும் அமலாவதை சட்ட அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.



ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாடுவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஆனால், பல கட்சிகள் ஆட்சி செய்தபோதிலும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படவில்லை. அரசியல் சாசனம் வழங்கும் இடஒதுக்கீடு கொள்கையை முறையாக அரசு அமல்படுத்தவில்லை. சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு சட்டமேதை அம்பேத்கர் பெயரை சூட்டுவதில் மட்டுமே அரசுகள் அக்கறை செலுத்துகின்றன" என்றார் நீதிபதி.



மேலும், எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காததால், சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனம் தொடர்பாக, 2018ல் வெளியான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News