Monday, April 8, 2019

ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மதுராந்தகம் மாணவர்


ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 23-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று மதுராந்தகம் மாணவர் ரிஷப் சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் நகரில் அடகுக் கடை நடத்தி வருபவர் தேஹ்ராஜ் ஜெயின். இவரது மகன் ரிஷப் (26). இவர் ஐஏஎஸ் தேர்வு எழுதி இருந்தார்.

அதில் இந்திய அளவில் 23-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகம் வந்த அவருக்கு பொதுமக்கள் சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ரிஷப் படித்த விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் லோகராஜ், வில்வராயநல்லூர் சுபம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.மனோகர் குமார், நகர ஜெயின் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு ரிஷபுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மேளதாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


ஏரிகாத்த ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் தினமணி செய்தியாளரிடம் ரிஷப் கூறியது:
நான் இப்பகுதியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் ஆரம்பக் கல்வியும், திண்டிவனம் மான்போர்டு மெட்ரிக் பள்ளியில் மேல்நிலைக் கல்வியும், பெருங்குடி எம்.என்.எம். பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தேன்.
அதைத் தொடர்ந்து, சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் சேர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதப் பயிற்சி பெற்றேன்.

கிராமப்பகுதி மாணவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதவேண்டும். அவர்கள் அதில் தேர்ச்சி பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்றவேண்டும். சமூக நலனில் அக்கறையுடைய எனக்கு, இந்திய மக்களுக்காகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.

Popular Feed

Recent Story

Featured News