Monday, April 1, 2019

வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உருக்கம்


குடி போதையிலும், செல்போனில்பேசிக்கொண்டும் வாகனங்கள் ஓட்டும்போது, மூன்றாவது நபர் மட்டுமல்லாமல், வாகன ஓட்டியும் காயமடைகிறார் என்பதால், சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



கடந்த 2012 டிசம்பர் 10ம் தேதி கிருஷ்ணகிரி புது பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி ரகு என்பவர் மீது வேகமாக வந்த பேருந்து மோதியது. இந்த விபத்தில் ரகு உயிரிழந்தார்.



இதையடுத்து, ரகுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மோட்டார் வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ரகுவின் குடும்பத்தினருக்கு ₹ 18 லட்சத்து 88 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு காப்பீடு நிறுவனத்திற்கு 2015ல் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து காப்பீடு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், இழப்பீட்டுத் தொகையை ₹25 லட்சத்து 30 ஆயிரமாக உயர்த்தி தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: விபத்து நிகழ்ந்த போது ரகுவின் மனைவி கருவுற்றிருந்தார். அவரது பெண் குழந்தைக்கு தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் இழப்பீடு வழங்கியுள்ளது.அதனால், இழப்பீட்டுத்தொகையை அதிகரித்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.



இந்த தொகையை நான்கு வாரங்களில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் காப்பீடு நிறுவனம் செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை, அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

கடந்த 2005ல் சாலை விபத்தில் 94,960 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2017ல் 1 லட்சத்து 47,913 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே சாலை விபத்து அதிகம் நடக்கும் நாடு நம்நாடுதான். இதற்கு காரணம் கவனக்குறைவும், சாலை விதிகளை மதிக்காததும்தான்.


குடி போதையில் வாகனம் ஓட்டும்போதும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டும்போதும் மூன்றாவது நபர் மட்டுமல்லாமல், வாகன ஓட்டியும் காயமடைகிறார். உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தற்கொலை செய்வதற்கே ஒருவருக்கு உரிமை இல்லை என்கிறபோது கவனக்குறைவு காரணமாக சாலையில் நடந்து செல்லும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்க என்ன உரிமை உள்ளது.



சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இதை ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News