Sunday, April 7, 2019

"ஒரே இடத்தில் ஒட்டுமொத்த படிப்புகள்': சென்னையில் மாபெரும் கல்விக் கண்காட்சி தொடங்கியது


ஒரே இடத்தில் ஒட்டுமொத்த படிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், வி. ஐ. டி கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் 6-ஆம் ஆண்டு "எடெக்ஸ் 2019' கல்விக் கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.



தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கல்விக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சனிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் பி.வி.விஜயராகவன் தொடங்கி வைத்தார்.

இதில் விஐடி டீன் (கல்வி) வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் இருதய நல மையத்தின் இயக்குநர் தணிகாச்சலம், எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன இணை துணை வேந்தர் ஜி.கோபால கிருஷ்ணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும வர்த்தகப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜெ.விக்னேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் "உன்னையே நீ அறிவாய்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை உரையை நிகழ்த்தினார்.



70-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து வழிகாட்டும் வகையில் இந்தக் கண்காட்சியை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கண்காட்சியில் பொறியியல், மருத்துவம், வர்த்தக மேலாண்மை, வங்கிப் படிப்பு, விமானம், தொலைத்தொடர்பு, ஆடை வடிவமைப்பு, விவசாயம், சித்த மருத்துவம்,

செவிலியர் பயிற்சி ஆகியவை சார்ந்த கல்வி நிலையங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் என பல துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள், ஊக்கத்தொகை, புதிய படிப்புகள் போன்ற பல்வேறு தகவல்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

வெறும் கண்காட்சியோடு மட்டும் நின்றுவிடாமல் மணவர்களுக்கு பயன் தரக் கூடிய பல்வேறு சிறப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் இந்தக் கண்காட்சியில் வழங்கப்பட்டன.



மாணவர்கள் மகிழ்ச்சி: இந்தக் கல்விக் கண்காட்சி குறித்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் கே.ரவிக்குமார், டி. தமிழ்ச் செல்வன், ம. வெங்கடகிருஷ்ணா, எஸ்.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கூறியது: பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு உயர்கல்வியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பதில் சற்று குழப்பமான மனநிலையில் இருந்தோம். ஆனால் மேற்படிப்புகளில் சரியான படிப்பைத் தேர்ந்தெடுக்க இந்தக் கண்காட்சி உதவியாக இருந்தது.

பொறியியல், மருத்துவம், சட்டம், விஞ்ஞானம், பங்கு வர்த்தகம், வேளாண் சார்ந்த படிப்பு, கலை, அறிவியல் படிப்புகள், மீன் வளப்படிப்புகள், அழகுக் கலை, கணினி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு என கண்காட்சியில்

அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்குகளிலும் எங்களுக்குத் தேவையான உயர் கல்வி குறித்த தகவல்கள் கிடைத்தன. ஒரே இடத்தில் பல துறை சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்தக் கண்காட்சியில் இதுவரை கேள்விப்படாத அதே நேரத்தில் அதிக வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை பெற வழிகாட்டும் புதிய படிப்புகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கின்றனர்.

இது தவிர உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவு வகைகள், மருத்துவம் சார்ந்த வழிகாட்டுதல்கள், மாதிரி நீட் பயிற்சி என கண்காட்சி முழுவதும் அறிவுப் பசியைப் போக்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன என்றனர்.



இந்தக் கண்காட்சியை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, வேல்ஸ் கல்வி குழுமம் , எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், ஹிந்துஸ்தான் கல்வி குழுமம், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி குழுமம், எச்.சி.எல் மற்றும் ஏபிஆர்பி போன்ற கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

இன்றுடன் நிறைவு

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கும் இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்றும் உயர்கல்வி படிப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மன நல ஆலோசனைகள்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட மனோதத்துவ நிபுணர் டாக்டர் கீதா லட்சுமி ஆலோசனைகளை வழங்கினார்.

தற்போதைய மாணவர்களின் உணவுப் பழக்கம் சமனற்ற நிலையில் உள்ளது. இதனால் பல்வேறு குறைபாடுகளுக்கு மாணவர்கள் ஆளாகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு சத்தான உணவு வகைகளை சாப்பிடுவது குறித்தும் ஊட்டச்சத்துவியல் நிபுணர் மல்லிகா சரவணன் ஆலோசனைகளை வழங்கினார்.



கல்வி, உடல்நலம் சார்ந்த ஆலோசனை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மாதிரி "நீட்' தேர்வு

நீட் தேர்வுகளில் 60 சதவீதம் கேள்விகள் உயிரியல் துறை சார்ந்தே கேட்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் ஏபிஆர்பி நிறுவனத் தலைவர் டாக்டர் அழகு தமிழ் செல்வி, உயிரியல் சார்ந்த படிப்புகளை எப்படி எளிதாக புரிந்து கொள்வது, படித்தவற்றை எவ்வாறு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது என்பது போன்ற பயிற்சிகளை வழங்குகிறார்.



அதோடு மாணவர்களுக்கான நீட் மாதிரி தேர்வினையும் நடத்துகிறார். மாணவர்கள் நீட் தேர்வினை முன்னரே எழுதிப்பார்ப்பதால் அவர்களுக்கு தேர்வு குறித்த குழப்பங்கள் அல்லது பயமோ நீங்க இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. சுமார் ஒரு மணி நடைபெற்ற இந்த தேர்வினை மாணவர்கள் ஆர்வமாக எழுதினர்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கிய கல்விக் கண்காட்சியைக் காண சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர்.

Popular Feed

Recent Story

Featured News