Wednesday, April 3, 2019

போதுமான இடவசதி இல்லாததால் சேலம் அருகே விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர்களை திருப்பி அனுப்பினர்: நாள் முழுவதும் காத்திருக்க வைத்த அவலம்


தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 14ம் தேதி தொடங்கி, 29ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 45 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இவர்களின் விடைத்தாள்களை திருத்த, சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம் சுப்ரமணிய நகர் ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆத்தூர் அப்பமாசமுத்திரம் கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளி ஆகிய 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று, சங்ககிரி மையத்திற்கு வந்த ஆசிரியர்களை இடமில்லை என காத்திருக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தின் சங்ககிரி மையத்தில், சங்ககிரி மற்றும் இடைப்பாடி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 800க்கும் அதிகமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த அழைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து நேற்று உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்த வந்திருந்தனர்.



நெறிமுறைகள் குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதுஒருபுறம் இருக்க, தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தலா 120 பேர், பிற பாடங்களுக்கு தலா 60 பேர் என மொத்தம் 420 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை போதுமான இடவசதி இல்லை, காத்திருங்கள் என கூறினார். ஆனால் மாலை வரை அவர்களுக்கு விடைத்தாள் வழங்கவில்லை. மாலை 4 மணிக்கு மேல், விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து அவர்களை விடுவித்து அனுப்பினர்.

இதனால் காலை முதல் காத்திருந்த ஆசிரியர்கள், கடும் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆசிரியர்களின் எண்ணிக்கையை அறிந்து, போதிய இடம் உள்ள விடைத்தாள் மையம் அமைக்காமல், வேண்டுமென்றே அலைக்கழித்துவிட்டனர். குடிநீர் வசதி கூட முறையாக செய்துதரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News