சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அப்பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நடிகர் அஜித் இணைந்து தயாரித்த ஆளில்லா ட்ரோன் அதிக நேரம் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் நடிகர் அஜித் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராகச் செயல்பட்டு பல சாதனைகளைத் தேடித்தந்தார். ட்ரோன் ஒலிம்பிக் உள்ளிட்ட மூன்று சர்வதேச பரிசுகளை இந்த ட்ரோன் வென்றது.
இதனிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த ஆளில்லா ட்ரோனை உலக அளவில் வான்வெளி விளையாட்டுகளை மேற்பார்வையிடும் அமைப்பான ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் கூட்டமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. ஜூலை 2018ல் ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஏரோ கிளப் ஆகிய அமைப்புகளின் அதிகாரிகள் முன்னிலையில் அண்ணா பல்கலையின் இந்த ட்ரோன் பறக்கவிடப்பட்டது.
5 முதல் 25 கிலோ எடை பிரிவைச் சேர்ந்த இந்த ட்ரோன் 6 மணிநேரம் மற்றும் 45 விநாடிகள் பறந்தது. இதற்கென உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் இதனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. 5 முதல் 25 கிலோ பிரிவில் இது இதுவரை இல்லாத புதிய உலக சாதனை எனவும் தெரிவித்துள்ளது.