Tuesday, April 30, 2019

மருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் புதன்கிழமை (மே 1) முதல் தொடங்குகின்றன.
இதனிடையே மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மிகச் சொற்ப இடங்களுக்கே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கானவை. அவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் இருக்கின்றன.


இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதில் 999 இடங்கள் நிரம்பின. இந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்கள் என மொத்தம் 800 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அண்மையில் தொடங்கியது.
அதில் அரசு ஒதுக்கீட்டு எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது எம்டிஎஸ் படிப்புகளுக்கும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இந்தச் சூழலில், வரும் புதன்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும், அதற்கான தகவல்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular Feed

Recent Story

Featured News