Saturday, April 27, 2019

பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போட்டியில்லை

பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டதால், நடப்பாண்டு, தீத்தொண்டு நாள் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவில்லை.கடந்த, 1944, ஏப்., 14ல், மும்பை துறைமுகத்துக்கு வந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது; தீயை அணைக்க முற்பட்ட தீயணைப்பு வீரர்களில் ஏராளமானோர், கப்பலுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.



அவர்களது வீரம், தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், ஏப்., 14 முதல், 20ம் தேதி வரை தீத்தொண்டு நாள் கடைபிடிக்கப்படுகிறது.இந்த நாட்களில், அந்தந்த மாவட்ட, தாலுகா அளவில் உள்ள தீயணைப்பு துறையினர் சார்பில், தீத்தடுப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே, பேரிடர் மேலாண்மை சார்ந்த போலி ஒத்திகை, பயிற்சி ஆகியவை நடத்தி காண்பிக்கப்படும்; பேச்சு, கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.



பொதுவாக, பள்ளிகள், ஏப்., மாதம் கடைசி வரை செயல்படும்; ஆனால், இம்முறை லோக்சபா தேர்தல் காரணமாக, பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப்பட்டு, ஏப்., 13ம் தேதியில் இருந்து விடுமுறையும் அளிக்கப்பட்டது. இதனால், தீத்தொண்டு நாள் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் போட்டிகளை, பள்ளி மாணவர்களுக்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

Popular Feed

Recent Story

Featured News