Thursday, April 4, 2019

பொறியியல் கலந்தாய்வு: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது


நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. அதேவேளையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒத்துழைப்பு இன்றி கலந்தாய்வு நடத்தப்பட்டால், அது பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என்றும் கல்வியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது. இதை நடத்துவதற்காக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராகவும், பல்கலைக்கழகப் பேராசிரியர் செயலராகவும், உயர் கல்வித் துறை செயலர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இடம்பெற்றிருந்தனர்.


இந்த நிலையில், அந்தக் குழுவில் உயர்கல்வித் துறைச் செயலர் தன்னிச்சையாக புதிய உறுப்பினர்களைச் சேர்த்திருப்பதாகவும், அதுகுறித்து எந்தவித தகவலும் அளிக்கவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அண்மையில் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவில் இருந்தும் அவர் விலகினார். இதன் காரணமாக, நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா என்ற சந்தேகம் எழுந்தது.


கடந்த ஆண்டில் இருந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அதற்கான மென்பொருள் கட்டமைப்புகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் வசம் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுவும் பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டன.
இதனால் பிளஸ்-2 தேர்வை எழுதிவிட்டு பொறியியல் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் எந்த முடிவையும் எடுக்க இயலாத சூழலில் இருந்து வந்தனர்.


இந்த நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக இம்முறை கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமே நடத்தும் என்று உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சில கல்வியாளர்கள், கடந்த 22 ஆண்டு காலமாக பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், தற்போது அதன் உறுதுணை இன்றி எந்தவிதமான குளறுபடிகளும் இல்லாமல் கலந்தாய்வை நடத்துவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News