Monday, April 29, 2019

மேல்நிலைக் கல்வியில் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் அலட்சியம் வேண்டாம்!


ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் முடியும் வரை, மாணவர்கள் பெற்றோர்கள் பரபரப்பாக இருக்கும் காலம். 10 மற்றும் 12 தேர்வு முடிகள் வெளியாவதும், மேற்படிப்புக்கு என்ன பிரிவுகள் தேர்ந்தெடுக்கலாம், எந்தப் பள்ளி / கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முழுநேரமும் அது குறித்தே யோசனையோடு இருப்பார்கள். சரியான வழிகாட்டல் இருக்கும்பட்சத்தில் மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற கல்வியைத் தேர்ந்தெடுக்க முடியும். இதற்கு உங்களுக்கு உதவுகிறார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.10-ம் வகுப்புக்குப் பிறகு:



10-ம் வகுப்பு முடித்ததும் வரும் முதல் குழப்பம், மேல்நிலைக் கல்வியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பதுதான். முதலில், 11-ம் வகுப்பில் எத்தனை விதமாக கோர்ஸஸ் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான பாடம் என்பதைக் கொண்டு, கோர்ஸைத் தேர்ந்தெடுங்கள். அறிவியல் பாடத்தில் ஆர்வமாக இருப்பவர்கள். அது தொடர்பான கணக்கு, அறிவியல் அடங்கிய பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ப்யூர் சயின்ஸையும் தேர்ந்தெடுக்கலாம்.



இதற்கு, மேல் படிப்புக்குப் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. காமர்ஸ் பிடிக்கும் என்பவர்கள் கட்டாயம் அது தொடர்பான கோர்ஸையே தேர்ந்தெடுங்கள். வட இந்தியாவில் சயின்ஸைவிட, காமர்ஸ் சார்ந்த படிப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பி.காம் படிக்க டெல்லி பல்கலைக்கழகத்துக்குச் செல்லலாம். இந்த கோர்ஸ் படித்தால்தான் முன்னேற முடியும் என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம். பல வகையான படிப்புகளும் அதற்கான வேலைவாய்ப்புகளும் இருக்கின்றன. பட்டப்படிப்புக்கு காந்தி நகர் ஐஐடி போன்ற நிறுவனங்களில் உதவித்தொகையோடு படிக்கும் வசதிகூட இருக்கிறது. 1 - 14 வயதுக்குட்பட்ட மனித ஆற்றல் உலகிலேயே அதிகளவில் இந்தியாவில்தான் இருக்கிறது.



அதனால், நாம் படிப்பதில் முழுத் திறனை வெளிக்காட்டினால் வெற்றி பெற முடியும். என்னைப் பொறுத்தவரை விடுதியில் தங்கிப் படிக்கும் முறையைப் பரிந்துரைப்பதில்லை. 12-ம் வகுப்பு வரையிலாவது வீட்டிலிருந்து படிப்பதே நல்லது. ஏனென்றால், அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என வீட்டு உறவுகளைப் பார்த்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அதைத் தவற விட்டுவிடக்கூடாது. 12-ம் வகுப்புக்குப் பிறகு: இப்போது 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. வழக்கமாகப் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் எனக் கவலையுடன் அலைவார்கள், இந்த வருடம் முதன்முறையாக 600 மதிப்பெண்களுக்கு முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.



அதனால், அவர்களின் கவலை இன்னும் அதிகரித்திருக்கும். அப்படியான எந்தக் கவலையும் அவசரமும் படாதீர்கள் என்பதே என் முதல் அறிவுரை. ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை அரசு நடத்தி வருகிறது. அவற்றில் 40 நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு தேர்தல் நடந்துகொண்டிருப்பதால், பல நுழைவுத் தேர்வுகளுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன. 40 நுழைவுத்தேர்வுகளில் 35 தேர்வுகளில் ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் என்று கேட்பதில்லை. தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்றுதான் இருக்கிறது.



எனவே, இரு ஆண்டுகள் சிரமப்பட்டு படித்து, தேர்ச்சி பெற்றிருக்கும் நீங்கள் அவசரப்பட்டுக் கிடைக்கும் பிரிவில் சேர்ந்துவிட வேண்டாம். அப்படிச் சேர்ந்துவிட்டால் பிறகு வாய்ப்புகளைத் தேடுவதற்கான சூழல் இருக்காது. பெற்றோர்களும் இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். மாணவர்கள் முதலில், தனக்கு முன் எத்தனை விதமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அரசு நிறுவனங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்யாது. அதனால், தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நிறைய கோர்ஸஸ் இருக்கின்றன. ஆர்க்கிடெக்ட், ஃபைன் ஆர்ட்ஸ், டூரிஸம் என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், சயின்ஸ் கிடைக்கவில்லை எனச் சோர்ந்து விட வேண்டாம்.

Popular Feed

Recent Story

Featured News