தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இணையதளம் சரிவர இயங்காததால் ஆசிரியர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5-ஆம் தேதியில் இருந்து 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் சுமார் 5.88 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில், ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜூன் 8, 9 ஆகிய இரண்டு நாள்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். அதன்படி, 8-ஆம் தேதி முதல் தாளும், 9-ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 5 முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆசிரியர்கள், தேர்வெழுதி தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சிறப்புத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.